ஒடிசா மாநிலத்திலிருந்து விரைவு ரயில் மூலம் 30,000 லிட்டர் திரவ ஆக்சிஜன் நிரப்பிய 2 லாரிகள் திருவள்ளூர் வந்தது

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, தமிழக அரசு, ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன் வரவழைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால், கடந்த 12ம் தேதி திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ரூர்கேலாவுக்கு விரைவு ரயில் மூலம், 2 டேங்கர் லாரிகள், 13ம் தேதி 3 டேங்கர் லாரிகள் திரவ ஆக்சிஜன் எடுத்து வர அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்ட தலா 15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு வீதம், 30 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்ட 2 டேங்கர் லாரிகள், திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தன.

அவற்றில் ஒன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொன்று, சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து மதுரைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் மாலை திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து விரைவு ரயிலில் 5 காலி டேங்கர் லாரிகள் ரூர்கேலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Related Stories: