கொரோனா தொற்று 2வது அலையை கட்டுப்படுத்த 10 ஆயிரம் காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கும் தமிழக அரசு: ஆணை பெற்ற 7 நாட்களில் நிறுவனங்கள் சப்ளை செய்ய வேண்டும்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையை கட்டுப்படுத்த 10 ஆயிரம் காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சிங்கப்பூரிலிருந்து 2 இந்திய விமானப்படை விமானங்களில் 256 காலி ஆக்சிஜன் சிலிண்டா–்கள், கண்டெய்னர்கள் சென்னை விமானநிலையம் வந்தன. தமிழக அரசு அதிகாரிகள் அதை பெற்றுக்கொண்டு லாரிகள் மூலம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுப்பி வைத்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் காரணமாக தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்ேட வருகிறது. எனவே தமிழக அரசு வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு போர்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது.

அரசு மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுவருகிறது. கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய உலகளாவிய அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. பல்வேறு தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுவருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு வழங்கப்பட்டுவருகிறது. மேலும் ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் சார்ந்த தொழிற்சாலைகள் அரசுடன் இணைந்து அமைக்க முன்வரும் தனியார் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிக அளவில் கொள்முதல் செய்வதற்காக தமிழக அரசு பல்வேறு பணிகளை செய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெர்மன், பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து 900 காலி சிலிண்டர்கள், மற்றும் காலி கன்டெய்னர்கள் 2 இந்திய விமானப்படை விமானங்களில் சென்னை வந்தன.

இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரிலிருந்து 200க்கு மேற்பட்ட காலி சிலிண்டர்கள் மற்றும் காலி கன்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு, இந்திய விமானப்படையின் முதல் விமானம் சென்னை  வந்தது. இந்நிலையில் மேலும் 10 ஆயிரம் காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி சிப்காட் மூலம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன்படி உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு ஆகியோரிடம் குத்தகை முறையில் சிலிண்டர்கள் வாங்கப்படவுள்ளது. இதன்படி ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஒரு சிலிண்டருக்கு மாதம் ₹ 500 வாடகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சிலிண்டருக்கு மாதம் ₹ 750 வாடகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி விருப்பம் உள்ள நிறுவனங்கள் 20ம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இவற்றை ஆய்வு செய்து தகுதி உள்ள நிறுவனங்களுக்கு கொள்முதல் செய்வதற்கான ஆணை வழங்கப்படும். ஒப்பந்தம் வழங்கப்பட்ட 7 நாட்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சிலிண்டர்களை விநியோகம் செய்ய வேண்டும் என்று ஒப்பந்தபுள்ளியில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: