கலெக்டர் ஆவதற்காக வீட்டை விட்டு வெளியேறிய மாணவி!

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

கர்நாடகாவின் ரம்பத் பகுதியில் குழந்தை திருமணம் நடைபெறுவது வழக்கமான விஷயம். அங்கு பெண் குழந்தைகள் வயதிற்கு வந்தவுடன் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். இதன் மூலம் தங்களின் குழந்தைக்கு பாதுகாப்பான வாழ்க்கை அமையும் என்பது அந்த கிராமத்து மக்களின் நம்பிக்கை.

குழந்தை திருமணம் நாடு முழுதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமமும் அதற்கு விதிவிலக்கல்ல. இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் இங்கு குழந்தை திருமணம் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

சிக்கபலாபுரா மாவட்டம் கோட்டூரு கிராமத்தை சேர்ந்த சிறுமி ரேகா. இவர் நான்கு மாத குழந்தையாக இருந்தபோது அவரது தாயையும் அவரையும் தவிக்க விட்டு தந்தை ஓடிவிட்டார். அதன் பிறகு அவர் திரும்பவே இல்லை. குழந்தையை காப்பாற்றுவது மற்றும் குடும்ப பொறுப்புகள் எல்லாம் ரேகாவின் தாயின் தலையில் விழுந்தது. எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் போராடி ஜெயிக்க வேண்டும் என்பது பெண்ணுடைய கணம் என்பதால் ரேகாவின் தாய் அதை எதிர்கொள்ள ஆரம்பித்தார்.

வீட்டுவேலை செய்து சிறுமி ரேகாவை காப்பாற்றினார். ேரகாவும் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்தார். இதற்கிடையில் அவரைமேலும் படிக்க வைக்கக்கூடிய திறன் அவரின் தாய்க்கு இல்லை. அவரும் மற்றவர்கள் போல் யோசிக்க ஆரம்பித்தார். 10ம் வகுப்பில் பொதுத் தேர்வில் 74 சதவிகித மதிப்பெண் பெற்று ரேகா தேர்ச்சி பெற்றார்.  இதையடுத்து தான் அவரது வாழ்வில் விதிவிளையாடியது. இதற்கு மேல் பொறுக்கமுடியாத தாய் தனது சகோதரனுக்கு ரேகாவை திருமணம் செய்ய முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

திருமணத்தில் விருப்பம் இல்லாத ரேகா அதில் இருந்து தப்பிக்க தன் தோழியின் உதவியுடன் வீட்டை விட்டு வெளியேறி பெங்களூருக்கு சென்றுவிட்டார். அங்கு தனது தோழி வீட்டில் தங்கிய ரேகா அங்கிருந்தபடியே பிளஸ் 2 படித்தார். தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் கன்னட பள்ளியில் சேர்ந்து  படித்த அவர் சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில் 600க்கு 542 மதிப்பெண்கள் பெற்றார். தொடர்ந்து கணினி பயிற்சியும் பெற்றார். குழந்தை திருமணத்தில் இருந்து தப்பிய அவர் இரண்டு ஆண்டுகளாக போராடி பிளஸ் 2வை வெற்றிகரமாக

முடித்துள்ளார்.

இப்போது அவரது ஆசை எல்லாம் கலெக்டர் ஆவது தானாம். இதற்காக கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பிய ரேகா, ‘ஸ்பார்ஷா டிரஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டார். அந்த அமைப்பினர் உதவியுடன், கல்லூரியில் பி.ஏ வரலாறு துறையை தேர்வு செய்து அதில் படிக்க உள்ளார். கலெக்டர் ஆவதுதான் ரேகாவின் கனவு என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். படிப்பில் மட்டுமல்ல கபடி, த்ரோபால், பரதநாட்டியத்திலும் அசத்தி வரும் ரேகாவிற்கு, கலெக்டர் ஆகி பெண்களின் நிலையை உயர்த்த வேண்டுமாம்.

பா.கோமதி

Related Stories: