கேரளாவில் கனமழை 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்: லட்சத்தீவுக்கு அருகே அரபிக்கடலில் உருவான மிகத்தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. டவ் டே என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக கேரளா முழுவதும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்பால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதற்கிடையே எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்தில் ஆற்றில் மூழ்கி 2 பேர் இறந்தனர்.கடந்த இரு தினங்களாக திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், கண்ணூர் உட்பட கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்தது. பல இடங்களில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்தன. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

திருவனந்தபுரம், எர்ணாகுளம், ேகாழிக்கோடு, கண்ணூர் உட்பட பல மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதால் பல வீடுகள் இடிந்தன. மணிமலை ஆறு, அச்சன்கோவில் ஆறு உட்பட பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் இடுக்கி மாவட்டத்தில் 2 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. நாளை (17ம் தேதி) வரை கேரளா முழவதும் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று திருவனந்தபுரம், எர்ணாகுளம் உட்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணி முதல் இன்று காலை 7 மணிவரை பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. மழை தொ டர்ந்தால். கடந்த 2018, 19 ஆண்டுகளை போல மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என அஞ்சப்படுவதால் பேரி டர் நிவாரண படையினர், கடற்படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மீட்பு ஏற்பாடு: பிரதமர் ஆய்வு

டவ்டே புயல் குஜராத் அருகே நாளை மறுதினம் பகல் அல்லது மாலையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் குஜராத்தில் தீவிர முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குஜராத், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, கோவா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு படை 100 குழுக்களை அனுப்பி உள்ளது. இந்த முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: