அரசின் உத்தரவை மீறி செயல்பட்ட 2 நகை கடை உள்பட 7 கடைகளுக்கு சீல்: திருவாரூரில் அதிகாரிகள் அதிரடி

திருவாரூர்: கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கினை கடுமையாக அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து நாகை செல்லும் வழியில் கானூர், மயிலாடுதுறை செல்லும் வழியில் கீரனூர், கும்பகோணம் செல்லும் வழியில் அத்திக்கடை, மன்னார்குடி வழியாக தஞ்சை செல்லும் வழியில் வடுவூர் திருவாரூரிலிருந்து தஞ்சை செல்லும் வழியில் கோவில்வெண்ணி, திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் செல்லும் வழியில் தாணிக்கோட்டகம் உட்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 14 இடங்களில் இருந்து வரும் போலீஸ் சோதனை சாவடியில் நேற்று முதல் சோதனையானது கடுமையாக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசின் உத்தரவை மீறி செயல்படும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணியும் நடைபெற்று வரும் நிலையில் இதற்காக சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய பிடிஓக்கள் மற்றும் போலீசாரை கொண்டு 28 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி நேற்று திருவாரூர் நகரில் நகை கடைகள் இரண்டு, 2 காய்கறி கடைகள், 2 நகை பட்டறை உட்பட மொத்தம் 7 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது மட்டுமின்றி தலா ரூ.500 வீதம் நகராட்சி கமிஷனர் (பொ) சண்முகம் தலைமையில் அலுவலர்கள் அபராதமும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2 டீக்கடைக்கு சீல்: திருத்துறைப்பூண்டியில் கொரோனா ஊரடங்கு விதிமுறை மீறிய இரண்டு 2 டீ கடைகளுக்கு சீல் வைப்பும், 2 நிதி நிறுவனங்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதித்தும் நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்தார்.

திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர்(பொ)செங்குட்டுவன், நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன் மற்றும் அலுவலர்கள் ஊரடங்கு விதிமுறை மீறி செயல்படும் கடைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 10 கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. விதிமுறை மீறி மன்னை சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இயங்கிய 2 டீக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. விதிமுறை மீறி 12 மணிக்கு பிறகும் இயங்கிய 2 நிதி நிறுவனங்களுக்கு தலா ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

Related Stories: