ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் இல்லை கொரோனாவால் இறந்த இந்துக்களின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்; மதங்களை கடந்த மனிதநேயம்: வலைத்தளங்களில் குவியும் பாராட்டு

பேராவூரணி: தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஆவணம் சாலை பகுதியை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த 30 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முன்வராத நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்த சேதுபாவாசத்திரம் பாவா என்பவருக்கு தகவல் கிடைத்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ரம்ஜான் பண்டிகை தினமான நேற்று தொழுகையை முடித்து கொண்டு பேராவூரணி வந்து சடலத்தை, இந்துமத வழக்கப்படி, உரிய மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளனர்.

இதை போல் தென்னங்குடி பகுதியில், தஞ்சாவூர் மருத்துவமனையில் கொரோனாவால் இறந்த 50 வயது மதிக்கதக்க ஒருவர் சடலத்தையும் நேற்று அடக்கம் செய்துள்ளனர். மேலும் கடந்த 11ம் தேதி பேராவூரணியில் 60வயது மதிக்க தக்க பிரபல மருத்துவர் உடலையும், 12ம் தேதி மாவடுகுறிச்சியில் 55 வயது மதிக்க ஒருவர் சடலத்தையும் அரசின் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்துள்ளனர், இவர்கள் அனைவருமே இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரின் பாராட்டையும், வாழ்த்துக்களையும் பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தஞ்சை தெற்கு மாவட்ட துணை செயலாளர் சேதுபாவாசத்திரம் பாவா கூறியது, கொரோனாவால் உயிரிழந்த சடலத்தை அடக்கம் செய்ய உறவினர்கள் பயந்து, அடக்கம் செய்யமுடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. இதுபற்றிய தகவல் எங்களுக்கு கிடைத்தால் உடனடியாக நானும், எங்கள் அமைப்பின் மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி, சேதுபாவாசத்திரம் கிளையை சேர்ந்த சேக்அப்துல்லாஹ், நூர்தீன், சம்பைப்பட்டினம் கிளையை சேர்ந்த பரக்கத்அலி, மல்லிப்பட்டினம் கிளையை சேர்ந்த அப்துல்லாஹ் ஆகிய 6 பேரும் சென்று, சடலத்தை, மயானத்திற்கு கொண்டு சென்று இந்துமத முறைப்படி சடலங்களை அடக்கம் செய்து வருகிறோம்.

சடலத்தை அடக்கம் செய்ய நாங்கள் வந்து செல்லும் வாகனங்களுக்கு பெட்ரோல் செலவு கூட நாங்களே செய்து கொள்கிறோம். தண்ணீர் கொடுத்தால் கூட வாங்கிக் குடிப்பதில்லை. அனைத்து செலவுகளையும் நாங்களே, சொந்தமாக செய்து கொள்கிறோம். இதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறோம். சடலத்தை அடக்கம் செய்யும் பணியில், பயன்படுத்தப்படும் கவச உடைகளை மட்டும் தரமானதாக அரசு வழங்கினால் உதவியாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் பயப்பட்டு வெளியே போக வேண்டாம் என தடுத்தாலும், மக்களுக்கு சேவை செய்ய, இறைவன் எங்களுக்கு அளித்த வாய்ப்பாக இதனைக் கருதி செய்து வருகிறோம். என்றார்.

பெரம்பலூரில் கிறிஸ்தவ பெண்:

பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்த கிறிஸ்தவ ஆசிரியை ஒருவரின் தாயார் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தார். அவரது சடலத்தை அரசு மருத்துவமனையிலிருந்து பெற்றுத் தருவதாகவும், கல்லறை தோட்டத்திற்கு வந்து நல்லடக்கம் செய்து தரும்படியும் பெரம்பலூர் சவுபாக்கியா நகரைச் சேர்ந்த செல்வராஜ் (44) என்பவர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட நிர்வாகி அகமது இக்பாலை போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டார்.

அதனை ஏற்று நேற்று அதிகாலை ரம்ஜான் தொழுகை நடத்தி முடித்ததும் அகமதுஇக்பால் தலைமையிலான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் கல்லறை தோட்டத்திற்கு, கொரோனா பாதுகாப்பு கவச உடையணிந்து வந்து, கிறிஸ்தவ முறைப்படியும், மத்திய மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படியும் உடலை நல்லடக்கம் செய்தனர்.

Related Stories: