கடம்பூர் மலைப்பகுதியில் விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் விவசாயிகள் அச்சம்

சத்தியமங்கலம்: கடம்பூர் மலைப்பகுதியில் விவசாய விளை நிலத்தில் புகுந்த காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் வனத்தைவிட்டு வெளியேறி கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில், நேற்று காலை கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள், விவசாய விளை நிலத்தில் சுற்றித்திரிந்தன. யானைகள் பகல் நேரத்தில் விவசாய விளை நிலத்தில் சுற்றி திரிவதைக் கண்ட கிராம மக்கள் அச்சமடைந்தனர். சிறிது நேரம் அங்கும் இங்குமாக ஓடிய காட்டு யானைகள், விவசாய நிலத்தை விட்டு வெளியேறி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.

பகல் நேரங்களில் காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி விவசாய விளை நிலங்களில் நடமாடுவதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை மேய்ப்பவர்கள் மற்றும் விவசாய பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: