சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ரெம்டிசிவிர் மருந்து விற்பனை இன்று முதல் தொடக்கம்: அதிகாலை முதல் காத்திருந்த மக்கள்

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ரெம்டிசிவிர்  மருந்து கூடுதல் கவுண்டர்களுடன் இன்றுமுதல் விற்பனை தொடங்கவுள்ளதால் முன்கூட்டியே நள்ளிரவு முதல் பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்.

ரெம்டிசிவிர் மருந்து தட்டுப்பாடு மற்றும் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 2 கவுண்டர்களில் ரெம்டிசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டது. அங்கு கூட்டம் அலை மோதியதால் திருச்சி, மதுரை, உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விற்பனை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனாலும் சென்னையில் மருந்து வாங்கவருபவர்கள் கூட்டம் குறையவில்லை.

 இதனால் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 4 கவுண்டர்களில் ரெம்டிசிவிர்  மருந்து விற்பனை காலை 9 மணி முதல் துவங்க உள்ளது. இதனையொட்டி நேரு உள்விளையாட்டு அரங்கின் வாசலில் விடிய விடிய பொதுமக்கள் காத்திருகின்றனர். அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். தேவைக்கேற்ப அதிக அளவில் விற்பனை கவுண்டர்களை திறக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 ரெம்டிசிவிர்  மருந்து குப்பிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளார். இது தொடர்பாக மருந்துக்கடை உரிமையாளர் சண்முகம், அவரது சகோதரர் கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இதில் நெல்லை மதுரையில் இருந்து ரூ.16,000-க்கு வாங்கிவந்து கோவில்பட்டியில் ரூ.30,000-க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மதுரை மற்றும் நெல்லையில் யார்யாரிடமிருந்து ரெம்டிசிவிர்  மருந்துவாங்கப்பட்டது, இதன் பின்னணியில் இருக்கும் கும்பல் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார்.

Related Stories: