4 ஆண்டுகளாக எந்தவொரு பணிகளும் மேற்கொள்ளாத நீர்வள ஆதார மேம்பாட்டு குழுமத்துக்கு மூடுவிழா

* தேவையற்ற செலவை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை

* 2 பொறியாளர்கள் மருத்துவ கட்டுமான பணிக்கு மாற்றம்

சென்னை: தமிழக நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தவும், புதிய நீர் ஆதாரங்களை கண்டறியும், உரிய திட்டங்களை செயல்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு நீர்வள ஆதார மேம்பாட்டு குழுமம் கடந்த 2017ல் டிசம்பரில் தொடங்கப்பட்டது. இதன் மூலம், நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்கு தேவைப்படும் நிதி ஆதாரங்களை கண்டறியவும் மத்திய அரசு நிதி மற்றும் இதர நிதி வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து நிதி பெற நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் தலைமையில் இக்குழுமம் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் தலைமையில் 6 பொறியாளர்கள் உள்ளனர். இந்த பொறியாளர்கள் குழுவினர் சார்பில் மாநிலம் முழுவதும் நீர்வள ஆதாரங்களை உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யவும் உத்தரவிட்டது.

ஆனால், இந்த குழுமம் சார்பில் திட்ட உருவாக்கம் பிரிவில் ஏற்கனவே தயாரித்த திட்டப்பணிகளுக்கான அறிக்கையை பெற்று செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததாக தெரிகிறது. குறிப்பாக, காட்டூர் மற்றும் தட்டமஞ்சி இரட்டை ஏரிகளை இணைத்து புதிய நீர் தேக்கம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் கழுவேலி ஏரியினை புதிய கட்டமைப்புகள் மூலம் மீட்டெடுத்து நீர்த்தேக்கம் அமைத்தல் மற்றும் கடல் நீர் உட்புகுவதை கட்டுப்படுத்தல், பரம்பிகுளம், ஆழியாறு கால்வாய் மற்றும் உயர்மட்ட கால்வாய்களின் கட்டுமானங்களை மேம்படுத்துதல் உள்ள 6 பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையை பெற்று இந்த குழுமம் சார்பில் மட்டும் கடனுதவி மட்டுமே பெறப்பட்டன. மற்றபடி இந்த குழுமம் சார்பில் எந்தவொரு வளர்ச்சி பணிகளுக்கான அறிக்கையையும் தயார் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நீர்வள மேம்பாட்டு குழுமத்திற்கான கால அவகாசம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதற்கிடையே, குழுமத்தின் பணிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மணிவாசனுக்கு கடிதம் எழுதியது. ஆனால், குழுமத்தின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காத நிலையில், அந்த குழுமத்தால் அரசுக்கு கூடுதல் செலவு என்பதால் முதல்வர் மு.க.ஸ்டாலினும் குழுமத்துக்கான கால நீட்டிப்பு அனுமதி வழங்கவில்லை. இதனால், நீர்வள ஆதார மேம்பாட்டு குழுமத்தில் நிரந்தரமாக மூடு விழா காணப்பட்டன. அதே நேரத்தில் குழுமத்தில் பணியாற்றி வந்த உதவி செயற்பொறியாளர் செந்தில்குமாரை ஸ்டான்லி மருத்துவ கட்டுமான பணிகளுக்கும், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திர பிரசாத்தை டிஎம்எஸ் மருத்துவ கட்டுமான பணிகளுக்கும் பணியிட மாற்றம் செய்து நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>