தயார் நிலையில் வைக்க தமிழக அரசு உத்தரவு பள்ளிகளில் கொரோனா சிகிச்சை மையம்: தமிழக அரசு அதிரடி திட்டம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் முகாம்கள் ஏற்படுத்த பள்ளிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலையின் காரணமாக நாடு முழுவதும் லட்சக் கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் உயிரிழந்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய இடம் மற்றும் படுக்கை வசதிகள் இல்லாமல் தவிக்கின்ற நிலையும் நீடிக்கிறது. அதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க தமிழக அரசின் தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னை நகரில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறையின் சார்பிலும், மாநகராட்சியின் சார்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளை பொருத்தவரை அவற்றில் அதிக அளவில் வகுப்பறைகள் உள்ளன. அவை பெரிய அளவிலும் இருப்பதால் அவற்றில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று அரசு கருதுகிறது. இதன் பேரில் மேற்கண்ட பள்ளிகளில் சிகிச்சை மையங்கள் உருவாக்க ஏற்பாடுகள் நடக்கிறது.

கடந்த ஆண்டில் சென்னையில் சுமார் 66 பள்ளிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்த மையங்கள் அனைத்தும் பயன்பாட்டுக்கு பிறகு அதே வசதிகளுடன் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த பள்ளிகளை மீண்டும் திறந்து கடந்த ஆண்டைப் போல சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. அதன் பேரில் மாநகராட்சியில் அடங்கிய அனைத்து பெரிய பள்ளிகளையும் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் அது தொடர்பாக மாநகராட்சி ஆணையுடன் கலந்து பேசி எங்கெல்லாம் பள்ளிகள் உள்ளதோ அங்கெல்லாம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாநகராட்சிகேட்டுக் கொண்டால் பள்ளிகளை ஒப்படைக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறையும், மாநகராட்சியும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளன.

Related Stories: