நாமக்கல் மாவட்டத்தில் 12 மணிக்கு மேல் செயல்படும் கடைகளுக்கு சீல் வையுங்கள்-நகராட்சி ஆணையர்களுக்கு கலெக்டர் உத்தரவு

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா விதிமீறி பகல் 12 மணிக்கு மேல் செயல்படும் கடைகளுக்கு சீல் வைக்கும்படி, நகராட்சி ஆணையாளர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, குமாரபாளையத்தில் விதிமீறி செயல்பட்ட ஒரு நிறுவனம், 4 மளிகை கடைகளுக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ், கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாமக்கல், குமராபாளையம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் ராசிபுரம் நகராட்சி ஆணையாளர்களிடம்  காணொலி காட்சி மூலம் நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

நகராட்சி பணியாளர்களை 3 குழுக்களாக பிரித்து, கொரோனா நோய் தோற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும். பணியாளர்கள் முககவசம், கையுறை, காலணிகள்  அணிந்து தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட மளிகை கடைகள், டீக்கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட கடைகள், பகல் 12 மணிக்கு மூடப்பட வேண்டும். மீறி செயல்படும் கடைகளுக்கு, நகராட்சி ஆணையாளர்கள் சீல் வைத்து அபராதம் விதிக்க வேண்டும். திருமண மண்டபங்களில் விஷேச நிகழ்வுகளில் 50 பேருக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நகராட்சி பணியாளர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை வளாகங்கள் மற்றும் கோவிட் - 19 சிகிச்சை மையங்களில், தினமும் 3 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.  மேலும், தனிமைப்படுத்தப்பட்வர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வைட்டமின் -சி, ஜிங் மாத்திரைகள், கபசுர குடிநீர் போன்றவை  வழங்க வேண்டும்.

பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். வெளியே வரும் போது முககவசம், தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு கலெக்டர் மெகரா-ஜ் தெரிவித்தார்.கூட்டத்தில், சேலம் மண்டல நகராட்சி நிர்வாக செயற்பொறியாளர் கமலநாதன், நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நூற்பாலை, மளிகை கடைகளுக்கு சீல்

பள்ளிபாளையம்: குமாரபாளையம் பகுதியில் கொரோனா பாதிப்பு  229 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 23 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் மெகராஜ் உத்தரவுபடி, நகராட்சி ஆணையர் ஸ்டான்லிபாபு மற்றும் அதிகாரிகள், நேற்று மதியம் ஊரடங்கை மீறி இயங்கும் நிறுவனங்கள், கடைகள், ஆலைகளை கண்காணித்தனர். இதில் ஒரு நூற்பு ஆலை இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆலை கதவை பூட்டி சீல் வைத்தனர். இதேபோல் விதிமீறி திறந்திருந்த 4 மளிகைகடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Related Stories: