வீட்டு தனிமையில் உள்ள நோயாளிகளை கண்காணிக்க விரைவில் 300 மருத்துவர்கள் பணி நியமனம்: கமிஷனர் ககன்தீப் சிங்பேடி தகவல்

சென்னை: வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் சித்த மருத்துவ மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது, மண்டலங்களில் வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளை கண்காணிக்க விரைவில் 300 மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்தார். சென்னையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்  பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகங்களில் படுக்கைகள் கிடைக்காமல் ஆம்புலன்சுகளில் நோயாளிகள் காத்திருக்கின்றனர். இதுபோன்ற நிலையை போக்க, சென்னையில் உள்ள கொரோனா சிகிச்சை பாதுகாப்பு மையங்களில் கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக நேற்று காலை திடீரென்று வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் இயங்கி வரும் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை  மையத்தில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவு வகைகளை பார்வையிட்டு அதன் தன்மைகளை கேட்டறிந்தார். அதன் பின்பு சித்த மருத்துவ முறையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மூலிகை மருத்துவ பொருட்கள் குறித்து தெளிவாக மருத்துவரிடம் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மையத்தில் வேலை செய்யும் நபர்கள் கொரோனா பாதுகாப்பு கவசங்களை முறையாக பயன்படுத்துகிறார்களா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.  

பின்னர், ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை பாதுகாப்பு மையங்கள் எண்ணிக்கையை சென்னையில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தற்போது, இருக்கும் சூழலை கருதி சென்னை மாநகராட்சிக்கு 10 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்ட 2,900 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொள்முதல் செய்யப்படவுள்ளது. மேலும், சென்னையில் உள்ள மண்டலங்களில் வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளை கண்காணிக்கவும், ஆலோசனைகள் வழங்கவும் புதிதாக 300 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்’ என்றார்.

Related Stories: