கொள்முதலுக்கு தமிழகம் டெண்டர் விட்டாலும் தடுப்பூசியை ஒதுக்கீட்டின்படி வேறு மாநிலங்களுக்கு மாற்றக் கூடாது: மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: தடுப்பூசி கொள்முதலுக்கு தமிழக அரசு டெண்டர் விட்டாலும் தமிழகத்திற்கான ஒதுக்கீட்டை வேறு மாநிலங்களுக்கு மாற்றக்கூடாது என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ரெம்டெசிவர் மருந்து பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வரும் வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முக சுந்தரம் ஆஜராகி, தடுப்பூசியை கொள்முதல் செய்ய தமிழக அரசு உலகளாவிய டெண்டர் கோரியுள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், தடுப்பூசி கொள்முதலுக்கு தமிழக அரசு டெண்டர் விடுத்தாலும், மத்திய அரசின் ஒதுக்கீட்டை வேறு மாநிலங்களுக்கு அனுப்ப கூடாது. டெண்டர் முடிவுக்கு வந்து சப்ளை தொடங்கிய பிறகே ஒதுக்கீட்டை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். தற்போதைய நிலையில் தடுப்பூசி, ரெம்டெசிவர் மருந்து பற்றாக்குறை உள்ளது.

ஆனால், அது உயிர் காக்கும் மருந்தல்ல என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.  இந்த இக்கட்டான சூழலில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது. சிறைகளில் கைதிகளை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு டிஜிபியுடன் கலந்து பேசி சிறைகளில் உள்ளவர்களுக்கான சிகிச்சை வசதிகளை பராமரிக்க வேண்டும். கொரோனாவிற்கு பலியானவர்களின் உடலை ஒப்படைக்கவும் தகனம் செய்யவும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருப்பதை தமிழக அரசும் புதுச்சேரி அரசும் உறுதி செய்ய வேண்டும்\\” என்று உத்தரவிட்டு விசாரணையை மே 17ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

Related Stories: