சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டங்களில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாநகராட்சி, காவல்துறை மற்றும் வருவாய் துறையினருடன் இணைந்து அமைக்கப்பட்ட மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினருக்கு முதன்மை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், ஊரடங்கு அமலாக்க குழுவினர் தங்கள் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து அரசின் வழிமுறைகளை பின்பற்றாத கடைகளை மூடி சீல் வைக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்களிடமிருந்து அபராதம் வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.