கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகரிக்க நிபுணர் குழு பரிந்துரை

டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை மேலும் அதிகரிக்க மத்திய அரசின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் வழங்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் முதல் டோஸ் வழங்கப்பட்டதில் இருந்து 4 முதல் 6 வாரங்களுக்கு பிறகு எடுத்துக்கொள்ளலாம் என்றும் முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டது.

கோவாக்சினுக்கு இந்த இடைவெளி 28 நாட்களாக இருந்தது. பின்னர் கோவிஷீல்டுக்கு 4 முதல் 8 வாரங்கள் எனவும் கோவாக்சினுக்கு 4 முதல் 6 வாரங்கள் எனவும் நீட்டிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸை 6 முதல் 8 வாரங்களில் எடுத்துக்கொள்ளலாம் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அந்த இடைவெளியை 12 முதல் 16 வாரங்கள் என நீட்டித்து மத்திய அரசின் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. கோவாக்சின் 2வது டோஸுக்கான இடைவெளி 4 முதல் 6 வாரங்கள் என்ற நிலை தொடர்கிறது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் 6 மாதங்களுக்கு பின்னர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கான தடுப்பூசியை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் பாலூட்டும் பெண்கள் பிரசவத்திற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று புதிதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>