மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சந்தோஷ்பாபு ஐஏஎஸ், பத்மபிரியா விலகல்: தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக இருவரும் அறிவிப்பு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சந்தோஷ்பாபு ஐஏஎஸ், பத்மபிரியா ஆகியோர் விலகியுள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். ஏற்கனவே கட்சியின் துணை தலைவராக இருந்த மகேந்திரன் விலகிய நிலையில் தற்போது அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த சந்தோஷ்பாபுவும் விலகியுள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சந்தோஷ் பாபு நடந்து முடிந்த சட்டமன்ற வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்ட அவர் தனது சொந்த காரணங்களுக்காக கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 6 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் நேர்மையான ஆட்சியை தர கமல்ஹாசனால் மட்டுமே முடியும் என்பதால் அவருடன் இருப்பதாக சந்தோஷ் பாபு ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில சுற்றுசூழல் அணியின் பொறுப்பாளராக இருந்த பத்மபிரியாவும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட்டு 33 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார். தற்போது அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>