சென்னையில் ஆக்சிஜன் இன்றி தவித்த கொரோனா நோயாளிகளுக்கு விரைந்து செயல்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்று தந்த போலீசார்!!!

சென்னை: சென்னையில் ஆக்சிஜன் இன்றி தவித்த கொரோனா நோயாளிகளுக்கு விரைந்து செயல்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்று தந்தபோலீசாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட செங்குன்றம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு நேற்று 8 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மட்டுமே கையிருப்பு இருந்தது.

அடுத்த சில மணி நேரத்தில் அவை காலியாகிவிடும் என்ற சூழ்நிலையில் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவமனை நிருவாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் நோயாளியின் உறவினர்கள் செய்வதறியாது தவித்தனர். யோதனை அறிந்து அங்கு வந்த நுண்ணறிவு பிரிவு காவலர் வில்லிவாக்கம் காவல் உதவி ஆணையர் ஸ்டீபனுக்குதகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரித்த உதவி ஆணையர் ஸ்டீபன், மணாலி அருகே சாத்தான்காடு பகுதியை சேர்ந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலையிடம் பேசி 20 ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்று தனியார் மருத்துவமனைக்கு கொடுத்துள்ளார். ஆக்சிஜன் தேவைப்பட்ட மருத்துவமனைக்கு 2 மணி நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்க செய்த போலீசாருக்கு நோயாளியின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: