தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக அப்பாவு பதவியேற்பு: முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்பட அனைத்துக்கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் வாழ்த்தி பேசினர். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 16வது சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. திமுக கட்சி மட்டும் 125 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்துள்ளது.  தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

முன்னதாக, 12ம் தேதி (நேற்று) தமிழக சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும். அன்றைய தினம் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சபாநாயகர் பதவிக்கு திமுக  சார்பில் ராதாபுரம் எம்எல்ஏ மு.அப்பாவுவும், துணை சபாநாயகர் பதவிக்கு கீழ்ப்பென்னாத்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கு.பிச்சாண்டியும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில்,  இருவரும் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியானது.

அதன்படி நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும், தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசும்போது, ‘‘16வது தமிழக சட்டப்பேரவைக்கு சபாநாயகர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த பதவிக்கு  மு.அப்பாவுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார். அவை முன்னவர் துரைமுருகன் வழிமொழிந்துள்ளார். வேறு யாரும் சபாநாயகர் பதவிக்கு மனு தாக்கல் செய்யாததால், மு.அப்பாவு போட்டியின்றி ஒருமனதாக தேர்வு  செய்யப்படுகிறார் என்பதை பேரவைக்கு மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். இத்துடன் என் பணியை நிறைவு செய்கிறேன். மரபுபடி அவை முன்னவரும், எதிர்க்கட்சி தலைவரும் சபாநாயகர் இருக்கையில் மு.அப்பாவுவை அமர வைப்பார்கள்”  என்றார்.

இதையடுத்து காலை 10.04 மணிக்கு சபாநாயகர் இருக்கையில் மு.அப்பாவுவை அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அழைத்து சென்று சபாநாயகர்  இருக்கையில் அமர வைத்தனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் அப்பாவு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னவர் துரைமுருகன் மற்றும் உறுப்பினர்களுக்கு கைகூப்பி நன்றி தெரிவித்துக்  கொண்டார். அவர் பதவியேற்றதும் திமுக உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

அதன்பிறகு, சபாநாயகர் மு.அப்பாவு தனது பணியை தொடர்ந்தார். முதல் பணியாக, துணை சபாநாயகர் தேர்தல் குறித்த அறிவிப்பை அப்பாவு பேரவையில் படித்தார். துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட கு.பிச்சாண்டி மட்டுமே மனு  தாக்கல் செய்துள்ளார்.

எனவே அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார் என்று அறிவித்தார். கு.பிச்சாண்டி தனது இருக்கையில் இருந்து எழுந்து, அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி வாழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து 16வது தமிழக சட்டப்பேரவைக்கு சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட அப்பாவு மற்றும் பிச்சாண்டியை வாழ்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்பட அனைத்துக்கட்சி  தலைவர்களும் பேசினார்கள். அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்: சபாநாயகர் இங்கே அவரது இருக்கையில் அமர்ந்திருக்கிறார். 1919ம் ஆண்டில் சென்னை மாகாணம், பஞ்சாப் ஆகிய 2 இடங்களில்தான் ஆட்சி நடைபெற்றது. நீதிக்கட்சி  ஆட்சியில் இருந்தது. 100 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று சிறப்புமிக்க சபாநாயகர் இருக்கையில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள்.

1919-1922ம் ஆண்டுகளில் வெலிங்டனும், அவரது மனைவியும் இந்த இருக்கையை வழங்கினர். இந்த இருக்கையில்  100 ஆண்டுகளில் எத்தனையோ பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். நானே 11 சபாநாயகர்களை பார்த்துவிட்டேன். சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள உங்கள் மனதில் இப்போது மகிழ்ச்சி இருக்கும். தமிழகத்தின் தென்கோடியில் உள்ள சிறிய  கிராமத்தில், விவசாய குடும்பத்தில் இருந்து இந்த அளவுக்கு வந்திருக்கிறீர்கள். இந்த அவைக்கு அமைச்சர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால், முதல்வருக்கும், சபாநாயகருக்கும் மட்டும்தான் படம், பெயர், புகழ் என்றைக்கும் இருக்கும்.  

அரசியல் போராளியாக இருந்து, சுயமரியாதையை அடகுவைக்க தெரியாமல், கண்ணுக்கு தெரியாத நீதி இந்த மண்ணுக்கு வருவதற்குள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று பேரவைக்கு தலைவராக வந்திருக்கிறீர்கள். இந்த சபையை  நேர்மையாக நடத்துங்கள். அதேபோல், துணை சபாநாயகரும் நீண்ட நெடுங்காலமாக அரசியலில் இருப்பவர். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எப்போதும் பேசமாட்டார். அவையில் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும். சபாநாயகர் வேகம் என்றால், துணை சபாநாயகர் நிதானம். அந்த வகையில், எங்களுக்கு இருவரும் வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: 1996ம் ஆண்டு ராதாபுரம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினீர்கள். 2001ம் ஆண்டு சுயேச்சையாக அதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும்  வெற்றி பெற்றீர்கள். 2006ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றீர்கள். 2021ம் ஆண்டு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறீர்கள். 16வது சட்டப்பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களுக்கு  அதிமுக சார்பிலும், எனது சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

1952ம் ஆண்டு நடைபெற்ற, முதல் பொதுத்தேர்தலுக்கு பிறகு, எத்தனையோ திறமையான பேரவை தலைவர்களை நாம் கண்டுள்ளோம். பேரவை தலைவர் என்பவர் அனைத்துக்கட்சிக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். அதைத்தான், இந்த  அவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு சபாநாயகரை வாழ்த்தி பேசும்போது, `ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்க வேண்டும்.

ஒரு பக்கம் சிதைந்து இருந்தால், செல்லாமல்  போய்விடும்’ என்று அண்ணா முன்பு கூறியதை சுட்டிக்காட்டினார். சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட தங்களுக்கு ஏற்கனவே ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. உறுப்பினர்கள் இங்கே பேசும்போது, உணர்ச்சிவசப்படுவார்கள்.  நகைச்சுவையாக பேசுவார்கள். ஆக்ரோஷப்படுவார்கள். சபாநாயகர் நடுநிலை தவறாமல் சட்டப்பேரவையை நடத்த வேண்டும். எங்களின் பூரண ஆதரவு உண்டு. இவ்வாறு அவர்கள் பேசினார்.

அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ், பாமக சட்டமன்ற தலைவர் ஜி.கே.மணி, பாஜ சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற தலைவர் சிந்தனை செல்வன், மதிமுக  சட்டமன்ற தலைவர் சதன் திருமலைக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் டி.ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் நாகைமாலி, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய  கட்சி உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினர் வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சி உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

சபாநாயகர், துணை சபாநாயகரை தேர்வு செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு கூடியது. நேற்றைய கூட்டத்தில் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு மட்டுமே நடைபெற்றது. நேற்றைய கூட்டம் மதியம் 12  மணிக்கு முடிவடைந்ததும், அவை முன்னவர் துரைமுருகன் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு சபாநாயகர் மு.அப்பாவு கூறும்போது, ‘‘பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடாமல் அவை  ஒத்திவைக்கப்படுவதாக” அறிவித்தார்.

Related Stories: