மக்களின் வசதிக்காக கொரோனா நிவாரண நிதி 2000 ஞாயிற்றுக்கிழமை வழங்க ஏற்பாடு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா நிவாரண உதவித் தொகையின் முதல் தவணை ₹2,000யை வரும் ஞாயிற்றுக்கிழமையும் (மே 16ம் தேதி) பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பொருள்  வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நோய் தொற்று  காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெறுந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையிலும் 4153.39 கோடி செலவில் மே 2021 மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப  அட்டைதாரர்களுக்கும் 2000 நிவாரண தொகையினை முதல் தவணையாக வழங்க அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக 2,000 ரொக்கம் அனைத்து அரிசி பெறும் குடும்ப  அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

அதன்படி குடும்ப அட்டைதாரர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்கள் வீதம் உரிய படிவத்தில், வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களைக் குறிப்பிட்டு டோக்கன்கள் கடந்த 10.05.2021 முதல் 12.05.2021 ஆகிய  மூன்று தினங்களில் வீடுதோறும் சென்று நியாயவிலைக் கடை பணியாளர்கள் மூலம் வழங்கவும், மேலும் இத்தொகையினை 15.05.2021 முதல் வழங்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 16.05.2021 அன்று  நியாயவிலைக் கடைகளுக்கு ஞாயிறு விடுமுறை என்பதாலும், கொரோனா நிவாரணத் தொகை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதாலும், 16ம் தேதி (காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை) பணிநாளாக  அறிவிக்கப்படுகிறது. அந்த நாளில் நிவாரண உதவித் தொகை பெறுவதற்கான டோக்கன்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதற்கான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: