கொரோனா பரவலால் வேலங்காடு திருவிழா ரத்து; பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தடுக்க தடுப்பு வேலிகள் அமைப்பு: அதிகாரிகள் நடவடிக்கை

அணைக்கட்டு: கொரோனா பரவலால் வேலங்காடு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தடுக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, வேலங்காடு கிராமத்தில் உள்ள ஏரியில் பொற்கொடியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி புதன்கிழமை புஷ்பரத ஏரித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவை வல்லண்டராமம், வேலங்காடு, பனங்காடு, அன்னாசிபாளையம் உள்ளிட்ட 4 கிராம மக்கள் சேர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தாண்டு இன்று, நாளையும் நடக்கவிருந்த ஏரித்திருவிழா கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. மேலும், கோயிலுக்கு பத்கர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் கோயிலுக்கு வெளியே பக்தர்கள் கூடுவதற்கும் தடை விதிக்கட்டுள்ளது. இந்நிலையில், இன்றும், நாளையும் வேலங்காடு ஏரியில் உள்ள கோயிலுக்கு பக்தர்கள் வருவதை தடுக்க ஏரிக்குள் நுழையும் அனைத்து பாதைகளிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், விழா ரத்து செய்யப்பட்டுள்ளது, பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என பேனர்கள் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், `வேலங்காடு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா கொரோனா தொற்று பரவல், ஊரடங்கு காரணமாக ரத்து செய்யபட்டுள்ளது. இன்றும், நாளையும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மட்டும் நடைபெறும். அதிலும் பக்தர்களுக்கு அனுமதியில்லை, விழா தடை செய்யப்பட்டிருப்பதால் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வர வேண்டாம், தடையை மீறி வருபவர்கள் மீது நடைவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

தண்டோரா மூலம் எச்சரிக்கை  

அணைக்கட்டு போலீசார் சார்பில் விழா நடத்தும் 4 கிராமத்திலும் தண்டோரா போட்டு, முழு ஊரடங்கு காரணமாக ஏரித்திருவிழா தடை செய்யப்பட்டிருப்பதால் யாரும் ஏரியில் பொங்கல் வைக்கவோ, சுவாமி தரிசனம் செய்யவோ கோயிலுக்கு வரக்கூடாது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

Related Stories: