சென்னையில் ஆக்சிஜன் படுக்கையை வைத்து நூதன முறையில் பேரம்!: போர்வை, தலையணைக்கும் தனித்தனி கட்டணம்..!!

சென்னை: பூவிருந்தமல்லி அருகே தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வைத்து நூதன முறையில் பேரம் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பூவிருந்தமல்லியை சேர்ந்தவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரது சிகிச்சைக்கு நாள் ஒன்றிற்கு ரூ.30,000 வீதம் ஐந்து நாட்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் மற்றும் போர்வை, தலையணைக்கு என 10 ஆயிரம் ரூபாயை சேர்த்து 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்டும்படி மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

இந்த பணத்தை தயார் செய்ய உறவினர்கள் சென்ற நிலையில், வேறொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழக அரசின் எச்சரிக்கையை மீறி கொரோனா சிகிச்சைக்கு நோயாளிகளிடம் அதிக பணம் பறிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகின்றது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் ஒரு சில தனியார் மருத்துவமனைகள் பணம் வசூலிக்கும் நோக்கத்தோடு மட்டுமே செயல்படுகின்றன. அதிக பணம் வசூலிப்பது மட்டுமின்றி போர்வை, தலையணைக்கும் தனித்தனி கட்டணம் வசூல் செய்வது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Related Stories: