சென்னையில் நாளை ஒருநாள் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கம்போல் இயங்கும்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னையில் நாளை ஒருநாள் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிடத்துக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் பொருட்டு 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஊரடங்கு நாட்களில் காய்கறி, மளிகை, பலசரக்கு, இறைச்சி உள்ளிட்ட கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தொழில்கள் வழக்கம் போல இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற எந்த கடைகளும் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே போல தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக், தியேட்டர்கள், மால்கள், ஷோ ரூம்கள் உள்ளிட்டவற்றுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஊரடங்கின் போது பொது போக்குவரத்துக்கு சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள், பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட ஏதும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 வாரங்களுக்கு ஏதும் இயங்காது என்பதால் மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொள்ள இன்றும் நாளையும் அனைத்து கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகளுக்கு அனுமதி அளிப்பதாக அரசு தெரிவித்ததால், மெட்ரோ ரயில்கள் நாளை இயங்குமா என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. இந்த நிலையில், நாளை ஒரு நாள் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல இயங்குமென மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படுமென தெரிவித்துள்ளது.

Related Stories: