தமிழக தலைமை செயலாளராக வெ.இறையன்பு நியமனம்: ராஜீவ் ரஞ்சன் அதிரடி மாற்றம்

சென்னை: தமிழக அரசின் தலைமை ெசயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐஏஎஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அண்ணா மேலாண்மை நிலையத்தின் தலைமை இயக்குனராக பதவி வகித்து வந்த டாக்டர் வெ.இறையன்பு ஐஏஎஸ் தமிழக தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தலைமை செயலாளராக பதவி வகித்து வந்த ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் 1963ல் இறையன்பு பிறந்தார். விவசாயத்தில் இளங்கலை பட்டம், வணிக மேலாண்மையில் முதுகலை பட்டம், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம், உளவியலில் முதுகலை பட்டம், வர்த்தக நிர்வாகத்தில் முனைவர் பட்டம், மேலாண்மையில் முனைவர் பட்டம் உள்ளிட்ட பட்டங்களை பெற்றவர்.

கடந்த 1987ல் நடந்த ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 15வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்று சாதனை படைத்தவர். இந்திய ஆட்சிப் பணியில் வித்தியாசமான அதிகாரி. சமூக அக்கறை அதிகம் கொண்டவர். முப்பது ஆண்டுகால அனுபவத்தில் பல்வேறு அனுபவங்களை பெற்றவர்.   நாகை மாவட்ட உதவி கலெக்டராக பணியாற்றியபோது மாவட்டத்தை இரண்டாக பிரிப்பதிலும், வெள்ள நிவாரணப் பணியிலும் முக்கிய பங்கு வகித்தவர். நெல்லுக்கு நேரடி கொள்முதல் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணித்து விவசாயிகளின் பக்கம் இருந்தார்.   கடலூர் மாவட்டத்தில் கூடுதல் கலெக்டராக பணியாற்றியபோது கடலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு பல்வேறு தொழில்திறன்களை வளர்க்கும் பயிற்சிகளை அளித்தார். கிராமப்புறங்களில் மரங்கள் நடுவதற்கும் அவற்றை பாதுகாக்கவும் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்த முயற்சி செய்து சாதித்து காட்டியவர்.  உலக தமிழ்மாநாட்டிற்காக கூட்டப்பட்ட அனைத்து குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டதுடன் 1995ல் தஞ்சையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டை வெற்றியடைய செய்ததில் இவரது பங்கு அதிகம்.

யுனிசெப்புடன் தொடர்பை ஏற்படுத்தி பல நகராட்சிகளில் சுய உதவிக்குழுக்களை அமைப்பதில் முக்கிய பங்காற்றினார். இவர் செய்தி மக்கள் தொடர்பு துறையின் இயக்குநராக பதவி வகித்தபோதுதான் வாராந்திர பத்திரிகை நிருபர்களுக்கும் அரசின் அடையாள அட்டை வழங்கினார். இதேபோல், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக  இருந்தபோது தறி நெய்யும் குழந்தைகளை கண்டறிந்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க முயற்சி மேற்கொண்டார். முதல்வரின் கூடுதல் செயலாளர், சுற்றுலாத்துறை செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை முதன்மை செயலாளர், அண்ணா மேலாண்மை நிலையத்தின் தலைமை இயக்குநர், புள்ளியியல் துறை ஆணையர், தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர்.

  சிறுசேமிப்பு வசூலுக்கான சிறந்த கலெக்டர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். அதிகம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ள இவர் எழுத்து துறையிலும் சிறந்து விளங்கி வருகிறார். அவர் எழுதிய ‘‘ஆத்தங்கரை ஓரம்’’ உள்ளிட்ட நூல்களுக்காக விருதுகளை பெற்றிருக்கிறார். இலக்கிய மேலாண்மை, ஐஏஎஸ் தேர்வும் அணுகுமுறையும், படிப்பது சுகமை, துரோகச்சுவடுகள் உள்ளிட்ட 102 நூல்களை எழுதியுள்ளார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் இறையன்பை தமிழக தலைமை செயலாளராக நியமனம் செய்துள்ளது அதிகாரிகள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ேநற்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கலெக்டர்கள் கூட்டத்தில் தலைமை செயலாளராக இறையன்பு கலந்துகொண்டார்.

Related Stories:

>