ஸ்டெர்லைட் ஆலைக்கு உதவியதைப்போல திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க எடுத்த நடவடிக்கை என்ன?

மதுரை: ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க உதவிய மத்திய அரசு, திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, கே.கே.நகரைச் சேர்ந்த வெரோனிகா மேரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருச்சி பெல் நிறுவனத்தில் மீண்டும் ஆக்சிஜன் தயாரிக்கவும், திருக்கழுகுன்றத்தில் உள்ள எச்எல்எல் பயோடெக் தடுப்பூசி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியை துவக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: கொரோனா பாதிப்பிற்கு முன் வரை தடுப்பூசி தயாரிப்பதில் இந்தியா முன்னோடியாக இருந்தது. உலகளவிலான ஏற்றுமதியிலும் முன்னணி வகித்தது. தற்போது இந்தியாவில் இரு தனியார் நிறுவனங்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசியை தயாரிக்கிறது.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இதில் தமிழகம், மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசத்தில் செயல்பட்ட தடுப்பூசி  நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மை என்னவென்று தெரியவில்லை. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகளையே அரசுகள் வாங்கி வருகின்றன. அரசுக்கு சொந்தமான தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை பயன்படுத்தவில்லை. 136 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போட பல ஆயிரம் கோடி செலவிட வேண்டி வரும். அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் தடுப்பூசி தயாரித்தால் தனியார் நிறுவனங்களிடம் பேரம் பேச வேண்டிய நிலை ஏற்படாது.

எனவே, திருச்சி பெல் நிறுவனத்தில் ஒரு மணி நேரத்தில் 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கும் வசதி உள்ளதா? இங்கு ஆக்சிஜன் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்பி திருச்சி சிவா அனுப்பிய கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அவசர காலத்தை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க உதவி செய்த மத்திய அரசு, திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய என்ன நடவடிக்கை எடுத்தது? இந்தியாவில் எத்தனை தடுப்பூசி உற்பத்தி மையங்கள் உள்ளன? அவற்றின் உற்பத்தித் திறன்? தற்போதைய நிலை என்ன? செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தின் உற்பத்தி திறன் எவ்வளவு? அதன் தற்போதைய நிலை என்ன?

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர் ) நிதியுதவியுடன் மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களுக்கு பதிலாக பாரத் பயோடெக் நிறுவனத்தில் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி செய்வது ஏன்?

மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளாக கொரோனா தடுப்பூசி உட்பட பிற தடுப்பூசிகளுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்தது? தனியார் நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் செலவில் தடுப்பூசி வாங்கும்போது, அரசுக்கு சொந்தமான தடுப்பூசி மையங்களை புதுப்பித்து தடுப்பூசி தயாரிக்க எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை மே 19க்கு தள்ளி வைத்தனர்.

* தனியார் மூலம் தடுப்பூசி உற்பத்தி செய்வது ஏன்?

* மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி

* அரசுக்கு சொந்தமான தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை பயன்படுத்தவில்லை.

* அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் தடுப்பூசி தயாரித்தால் தனியார் நிறுவனங்களிடம் பேரம் பேச வேண்டிய நிலை ஏற்படாது.

* 136 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போட பல ஆயிரம் கோடி செலவிட வேண்டி வரும்.

Related Stories: