புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன காய்கறி, பலசரக்கு, டீ கடைகள் பகல் 12 மணியோடு மூடப்பட்டன: தனியார்-அரசு பஸ்கள் 50% பயணிகளுடன் இயக்கப்பட்டன

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. அதன்படி, தமிழகம் முழுவதும் காய்கறி, பல சரக்கு கடைகள் அனைத்தும் மதியம் 12 மணியோடு மூடப்பட்டன. தனியார் மற்றும் அரசு பஸ்கள் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா 2வது அலையினால் உயிர்பலி அதிகரித்து வருகிறது. இதேபோல், தொற்று பாதிப்பு தினசரி 21 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நோய் தொற்றின் தீவிரம் அதிகமாக இருப்பதால் 6ம் தேதி (நேற்று) முதல் வரும் 20ம் தேதி வரை தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்தது. இந்தநிலையில், புதிய கட்டுப்பாடுகள் நேற்று காலை அமலுக்கு வந்தன. அதன்படி, அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கின. பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்கின. மற்ற இதர கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மேலும், மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல் செயல்பட்டது. தேநீர் கடைகள் நண்பகல் 12 மணியுடன் மூடப்பட்டன. இதேபோல், உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் செயல்படவில்லை. மாநிலம் முழுவதும் அழகு நிலையங்கள் திறக்கப்படவில்லை.

உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டது. இதேபோல், மீன் மார்க்கெட், மீன்கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்ற இறைச்சி கடைகளும் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டது. அதே நேரம் வருகிற சனி மற்றும் ஞாயிறு மீன், இறைச்சி கடைகள் திறக்க அனுமதி இல்லை. அரசின் புதிய கட்டுப்பாடுகளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அதிகாரிகளுடன் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அரசு உத்தரவை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று முதல் பகல் 12 மணிக்கு பிறகு கடைகள் உள்ளிட்டவைகள் அடைக்கப்பட்டதால், பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது.

Related Stories: