இங்கிலாந்து, மலேசியா, சீனாவில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை தனியார் நிறுவனங்கள் இறக்குமதி

சென்னை: கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாக பரவுகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த இரண்டாவது அலையில் நோயாளிகளுக்கு பெரும் சவாலாக இருப்பது ஆக்சிஜன் தட்டுப்பாடு. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இந்நிலையில், பல்வேறு தனியார் அமைப்புகள், மருத்துவமனைகள் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை வெளிநாடுகளிலிருந்து நேரடியாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளன. அதேபோல் இங்கிலாந்து, மலேசியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சரக்கு விமானங்களில் சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் முதல் வர தொடங்கியுள்ளன.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேற்று பிற்பகலில் வந்த ஒரு சரக்கு விமானத்தில் ஆக்சிஜன் தயாரிக்கும் 3 கருவிகள் சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு வந்தன. இதேபோல் நேற்று முன்தினம் இரவு வந்த ஒரு சரக்கு விமானத்தில் இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து 38 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் தமிழகத்தில் உள்ள சில தனியார் நிறுவனங்களுக்கு வந்தன.  

சென்னை விமான நிலைய சரக்ககத்தில் சுங்கத்துறையினர் அவசரகால அடிப்படையில், அந்த மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பார்சல்களுக்கு முன்னுரிமை அளித்து, சுமார் 30 நிமிடங்களில் சுங்கச்சோதனை முடித்து டெலிவரி கொடுத்தனர்.  அதோடு இதுபோன்று உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பார்சல்களை காலதாமதம் செய்யாமல், உடனடியாக சுங்கச் சோதனை முடித்து டெலிவரி கொடுக்க சுங்கத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் முதல் அலையான கடந்த ஆண்டில், மருத்துவ உபகரணங்களான வென்டிலேட்டர், அதற்கான உபகரணங்கள், மாஸ்க், சானிடைசர், தெர்மல் ஸ்கேனர் போன்றவைகள் பெருமளவு வந்தன. அவைகள் உடனுக்குடன் சுங்கச்சோதனையிட்டு டெலிவரி கொடுக்கப்பட்டன. இரவு, பகல் 24 மணி நேரமும் இப்பணி சென்னை விமான நிலைய சரக்கக பகுதியில் நடந்தது.  அதை கண்காணிக்க சுங்கத்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டது. காலதாமதம் ஏற்பட்டால் புகார் அளிக்க தனி செல்போன் எண் கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோன்ற  ஏற்பாட்டை தற்போதும் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: