வாகன சோதனையின் போது சிக்கினார் ரெம்டெசிவிர் கடத்திய மருந்துக்கடை உரிமையாளர்: கள்ளச்சந்தையில் 16 ஆயிரத்திற்கு விற்றதும் அம்பலம்

சென்னை: சென்னை குடிமைபொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர் தன்ராஜ் நேற்று சூளை போஸ்ட் ஆபீஸ் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் வந்த நபரை ஆய்வாளர் தன்ராஜ் வழி மறித்து விசாரணை நடத்திய போது, பைக்கில் வந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். உடனே அவர் பைக்கில் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் கொரோனா நோயாளிகளுக்கு உயிர் காக்கும் மருந்தாக பயன்படுத்தும் 12 பெட்டி கொண்ட ரெம்டெசிவிர் மருத்து இருந்தது தெரியவந்தது. உடனே அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் கொருக்குப்பேட்டை மண்ணப்பன் தெருவை சேர்ந்த கணேஷ் (27) என்றும், இவர் சூளை வெங்கடாசலம் தெருவில் மருந்து கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாட்டை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் கொரோனா நோயாளிகளிடம் ஒரு பாட்டில் ரெம்டெசிவிர் மருந்து 16 ஆயிரத்திற்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து குடிமைபொருள் தடுப்பு பிரிவு போலீசார் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய பைக்கில் கடத்திய மருந்துக்கடை உரிமையாளர் கணேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 பெட்டி கொண்ட ரெம்டெசிவிர் மருந்து மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தி பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: