சட்டமன்ற தேர்தலில் விசில் அடிக்காத குக்கர்: அமமுக வாஷ்அவுட் ஆனதால் தொண்டர்கள் விரக்தி

சென்னை: ஓபிஎஸ், இபிஎஸ் எதிர்ப்பால் பிரிந்து வந்த டிடிவி.தினகரன் அமமுகவை தொடங்கினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர் வெற்றிபெற்றதால் அமமுக மீது பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்தது. சசிகலாவை பெரிதும் நம்பி டிடிவி.தினகரன் அரசியல் செய்தார். ஆனால், சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்ததும் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக கூறினார். இது தினகரனுக்கு விழுந்த முதல் பேரடியாக அமைந்தது. இதைத்தொடர்ந்து, தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு மாற்றாக அமமுக அமையும் என அரசியல் கட்சி விமர்சகர்கள் தெரிவித்தனர். அதற்கேற்றார் போல் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிகவை தன் பக்கம் இழுத்தார்.

அதன்படி, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக சட்டமன்றத் தேர்தலில் அமமுக 161 தொகுதியில் களம் கண்டது. இதில், டிடிவி.தினகரன் கோவில்பட்டி தொகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரம் செய்தார். ஆனால், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக பல இடங்களில் டெபாசிட் கூட வாங்கவில்லை. சென்னையை பொறுத்தவரையில் அமமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட, கொளத்தூரில்-1,082, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி-1852, ஆர்.கே.நகர்-1,852, ராயபுரம் -1,121, துறைமுகம்-775, ஆயிரம் விளக்கு-1,155, அண்ணாநகர் 1,146, தி.நகர்-782, மயிலாப்பூர்-1118, வேளச்சேரி-1961 வாக்குகள் மட்டுமே பெற்றனர். இதேபோல், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அம்பத்தூர், திருவொற்றியூர், மதுரவாயல், உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமமுக 3 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.

100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியை விட குறைவான வாக்குகளையே அமமுக பெற்றுள்ளது. பல இடங்களில் 5ம் இடத்திற்கு அமமுக தள்ளப்பட்டது. இதேபோல், அமமுகவை பொறுத்தவரை டிடிவி.தினகரன் கோவில்பட்டி தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். அந்த தொகுதியில் அவர் வெற்றி பெறுவார் என கூறப்பட்டது. ஆனால், கோவில்பட்டியில் 56,153 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இதேபோல், அக்கட்சியின் சார்பில் எதிர்பார்க்கப்பட்ட ராணி ரஞ்சிதம், ராஜவர்மன், மாரியப்பன் கென்னடி, சாருபாலா தொண்டைமான், கதிர்காமு, சேலஞ்சர் துரை, பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன், அரூர் முருகன், சோளிங்கர் பார்த்திபன், ஜெயந்தி பத்மநாபன், கோதண்டபானி ஆகியோரும் படுதோல்வியை சந்தித்தனர். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக 5.16 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக வாக்கு வங்கி சரிந்து 2.47 சதவீதமாக ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: