அறுபத்து மூவர் என்ற அற்புத உற்சவம்

சிவாலயங்களில் பக்தோற்சவம் எனும் பெயரில் அடியவர்களுக்கு விழா நடத்த வேண்டுமென்று ஆகம நூல்கள் கூறுகின்றன. பெருந்திருவிழாவில் கொடியிறங்கிய பின்னர் பக்தோற்சவம் எனப்படும் விழா நடைபெறுகின்றது. சிவாலயங்களில் சண்டீசருக்கு மட்டுமே பக்தோற்சவம் நடத்தப்படுகிறது. சிவாகமங்களில் அறுபத்துமூவர் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆகமங்களின் காலம் நம்மால் ஆராய்ந்து அறிய முடியாத பழங்காலமாகும். அதனால் பின்னாளில் தோன்றிய அடியவர்கள் பற்றிய செய்திகளை அந்நூல்களில் காண முடிவதில்லை.

நாம் போற்றும் அடியவர்கள் எல்லோரும் ஏறத்தாழ 1,300 ஆண்டுகளுக்கு முன்பு மண் மேல் தோன்றி வாழ்ந்தவர்கள்.

எனவே, அவர்களைப் பற்றியோ அவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய விழாக்கள் பற்றியோ ஆகமங்கள் மற்றும் அதன்வழி நூல்களில் செய்திகளைக் காண முடிவது இல்லை. பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஏற்பட்ட பக்தி எழுச்சியால் ஆலயங்களில் பெரிய புராணத்துள் கூறப்பட்டுள்ள அடியவர்களின் திருவுருவங்களை எழுந்தருளி வைத்து வழிபடும் வழக்கம் வந்தது. அப்படி எழுந்தருளி வைக்கப்பட்ட திருவுருவங்களுக்கு நாள் வழிபாடுகளும், சிறப்பு வழிபாடுகளும் ஏற்படுத்தப்பட்டன. பெரிய தலங்களில் அறுபத்துமூவர் எனப்படும் அடியவர் கூட்டத்திற்கு மூலத் திருவுருவங்கள் அமைக்கப்பட்டதுடன் உலாத் திருமேனிகளும் செய்து வைக்கப்பட்டன.

திருவுலா திருமேனிகளுக்கு விழாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. இவ்விழாக்கள் யாவும் ஒரே மாதிரியாகவோ குறிப்பிட்ட நடைமுறையைப் பின்பற்றியோ நடத்தப்படுவதில்லை. மக்களின் வசதி, பொருளாதாரம் முதலிய வாழ்வியல் சூழ்நிலைக்கேற்ப நடத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இந்த விழா கொண்டாடப்படும் நாள் குறித்த வரையறை ஏதுமில்லை.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில்நடைபெறும் அறுபத்து மூவர் விழா பங்குனி மாதம் உத்திர நாளைக் கடைநாளாகக் கொண்டு நடத்தப்படும் பெருந்திருவிழாவின் போது 8ம் நாளில் நடத்தப்படுகிறது. விநாயகர் முன்செல்ல, பெரிய வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரரும் விமானத்தில் பின்னால் கற்பகாம்பாளும் பவனிவர சிங்கார வேலவரான முருகனும், சண்டீசரும் தொடர்ந்து வர, விழா நடைபெறுகிறது.

அடியவர்கள் அவரைப் பார்த்த வண்ணமே வீதிகளில் எழுந்தருளுகின்றனர்.இத்தலத்து அடியவரான சிவநேசரும் அவரது மகளும் பாம்பு தீண்டி மாண்டு திருஞானசம்பந்தரால் உயிர்ப்பிக்கப்பட்டவளுமான அங்கம்பூம்பாவையாரும் தனித்தனியே ஸ்ரீ விமானங்களில் பவனி வருகின்றனர். இவர்களுடன் முண்டகக்கண்ணி அம்மன், கோலவிழியம்மன், வாசுகி உடனாய திருவள்ளுவர், திரவுபதி அம்மன் எனப் பல்வேறு தெய்வங்களும் பவனி வருகின்றனர். சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து திருமுருகன் இவ்விழாவுக்கு எழுந்தருளி வீதி வலம் காண்கிறான். இவ்விழா நாளின் காலையில் திருஞானசம்பந்தர் பதிகம் பாடி, எலும்பும் சாம்பலுமாக எஞ்சியிருந்த பூம்பாவையை உயிர்ப்பிக்கும் ஐதீக விழா நடத்தப்படுகிறது.

அங்கம் பூம்பாவை திருவுருவத்தை விமானத்தில் வைத்து அலங்கரித்துத் திருக்குளத்தின் மேற்குப்பகுதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள வைத்து திரையிட்டு வைத்திருப்பர். சிவநேசன் செட்டியர் திருஞான சம்பந்தரை எதிர்கொண்டு அழைக்கும் நிகழ்ச்சியும் சம்பந்தர் அவ்விடம் வந்து மட்டிட்ட புன்னை எனக் தொடங்கும் பாசுரத்தைப் பாடும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

ஓதுவார் அந்தப் பதிகத்தை முழுவதுமாகப் பாடுவார். அத்துடன் பெரிய புராணத்தில் இந்நிகழ்ச்சி தொடர்பாக உள்ள செய்யுள்களும் ஓதப்படும். பாடல்கள் முடிந்ததும், திரையை விலக்கி அங்கம்பூம்பாவைக்கு தீபாராதனை செய்யப்படும். அப்போது அங்கு மண் சட்டியில் வைக்கப்பட்டிருக்கும் நாட்டுச்சர்க்கரையை எடுத்து மக்களுக்குப் பிரசாதமாக வழங்குகின்றனர்.

பின்னர், அங்கம்பூம்பாவை, சிவநேசர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரும் வடக்குமாட வீதியாக வலம் வந்து திருக்கோபுர வாயிலில் நிற்பர்.பிற்பகல் இவர்களுக்கு கபாலீஸ்வரர் காட்சி கொடுக்கும் விழா நடைபெறும். அதைத் தொடர்ந்தே அறுபத்து மூவர் விழா கொண்டாடப்படுகிறது. அறுபத்துமூவர் வரலாற்றுக்கு ஆதாரமானவைசைவம் போற்றும் அறுபத்து மூன்று அடியவர்களின் வரலாற்றுக்கு அடிப்படை நூல்களாக இருப்பவை மூன்றாகும். அவை சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த திருத் தொண்டத்தொகை, திருநாரையூர் நம்பியாண்டார் நம்பிகள் அருளிச்செய்த திருத்தொண்டர் திருவந்தாதி. சேக்கிழார் சுவாமிகள் அருளிச் செய்த பெரிய புராணம் என்பனவாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டே அடியவர்களைப் போற்றும் வகையில் எண்ணற்ற நூல்கள் வெளியாகியுள்ளன.

திருத்தொண்டத் தொகையில் சுந்தரர் அடியவர்களின் பெயரை மட்டுமே வரிசைப்படுத்திக் கூறி, அவர்தம் அடியார்க்கும் அடியேன் என்று போற்றியுள்ளார். அவரை தொடர்ந்து வந்த நம்பியாண்டார் நம்பிகள் பொள்ளாப் பிள்ளையார் மூலமாக உணர்த்தப் பெற்று திருத்தொண்டத்தொகையில் இடம் பெற்றுள்ள அடியவர்களின் ஊர், மரபு, அருட்செயல் ஆகியவற்றைக் கூறும் திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலை அருளிச் செய்துள்ளார். சேக்கிழார் சுவாமிகள் சுந்தரரின் திருத்தொண்டத் தொகையையும் நம்பியாண்டார் நம்பிகளின் திருத்தொண்டத் திருவந்தாதியையும் ஆதாரமாகக் கொண்டும், தன்னுடைய அளவற்ற ஆர்வத்தால் ஆராய்ந்து தெளிந்த செய்திகளைக் கொண்டும், திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணத்தைப் பாடி அருளினார்.

அதில் அறுபத்து மூன்று அடியவர்களின் வரலாறும் தொகையடியார்கள் இயல்பும் சிறப்புடன் விரித்துரைக்கப்பட்டுள்ளன. அன்பர்கள் திருத்தொண்டர் தொகைப் பாசுரத்தைக் தொகைநூல் என்றும், நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியினை வகைநூல் என்றும், சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணத்தை விரிநூல் என்றும் வழங்குகின்றனர். கல்வெட்டு கூறும் அறுபத்துமூவர் பெற்ற பேறுமுன்னாளில் திருக்கோயில்களில் பூசைகள் தடையின்றிச் சிறப்பாக நடைபெறவும், திருவிளக்கேற்றவும், அமுது படைக்கவும் அன்பர்கள் நிலமாகவும், பொற்காசுகளாகவும், ஆடுமாடுகளாகவும் கொடைகளை வழங்கி நிபந்தனைகளை ஏற்படுத்தியிருந்தனர். தம்முடைய அரசனின் வெற்றிச் செய்திகளுடன் தாமளித்த அந்த தானத்தைப் பற்றிய விளக்கமான செய்திகளையும், ஆலயச் சுவர்களில் கல்வெட்டாகப் பொறித்து வைத்தனர்.

அப்படி அளிக்கப்பட்ட தானச் செய்திகளின் முடிவில் இந்த தர்மத்தை, சூரிய சந்திரர் இருக்கும்வரை நடத்த வேண்டும் என்றும், அப்படிப் பாதுகாப்பவர் பெறும் புண்ணியங்கள் இவை இவை என்றும், தர்மத்தினை அழித்தவர்கள் அடையும் பாவம் இன்ன இன்னதென்றும் பட்டியலிட்டுக் குறித்து ஆணை வைத்துள்ளனர். சூரியசந்திரருள்ள வரை தர்மத்தை ரக்ஷிப்பவர்கள் பாதம் தன் தலை மேலானதென்றும், அவர்கள் பல செல்வங்களைப் பெற்று வாழ்வார்கள் என்றும், கோடி புண்ணியம் அடைவார்கள் என்றும் குறித்திருப்பதைக் காண்கிறோம். இதுபோல் அந்த தர்மத்தினை அழித்தவர்கள் நரகம் புகுவார்கள் என்றும், கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தைக் கொள்வரென்றும் பலவாறு சாபம் மொழிந்திருப்பதைக் காண்கிறோம்.

பக்தர்களுக்கு அன்னதானம்

10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடும் விழாவாக இது அமைகிறது. விழாவில் மக்கள் நன்மைக்காக நீர், மோர், பானகம், ஐஸ்கிரீம், பிரிஞ்சி, புளிசாதம், பொங்கல் முதலான உணவுப் பொருட்கள் பிஸ்கட், சாக்லெட், மிட்டாய்கள் போன்ற தின்பண்டங்களை அவரவர் சக்திக்கேற்ப தானமாக வழங்குகின்றனர்.

18 சப்பரங்கள்

கேடயம் என்னும் சப்பரங்களில் ஒன்றிற்கு நால்வர் வீதம் 18 சப்பரங்களில் அவர்கள் பவனி வருகின்றனர். இச்சப்பரங்களுடன் திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தனித்தனியாகப் பெரும் பல்லக்குகளில் உடன் வருகின்றனர்.

The post அறுபத்து மூவர் என்ற அற்புத உற்சவம் appeared first on Dinakaran.

Related Stories: