கொரோனா 2வது அலை சுனாமிபோல் பெரிய அலையாக வந்து கொண்டிருக்கிறது: மக்கள் ஒத்துழைத்தால் தடுக்கலாம்; சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சித்திக் தகவல்

சென்னை: நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா சிறிய அலையாக இருந்தது. தற்போது சுனாமி போன்ற பெரிய அலையாக வந்து கொண்டிருக்கிறது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே இந்த பெரிய அலையை ஒழிக்க முடியும் என்று சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சித்திக் கூறினார். சென்னை சிஐடி நகரில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களிடம் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சித்திக் நேற்று உரையாடினர்.

பின்னர் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சித்திக் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் கொரோனா நோயாளிகளில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.

கடந்த ஆண்டு சிறிய அலையாக இருந்தது தற்போது சுனாமி போன்ற பெரிய அலையாக வந்து கொண்டிருக்கிறது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே இந்த பெரிய அலையை ஒழிக்க முடியும். மக்கள் பதற்றம் அடையாமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சென்னையில் வரும் 10 நாட்களில் 2.400 படுக்கை வசதிகளை அதிகரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்திலும் ஆக்சிஜசன் படுக்கைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக உடனடியாக 250 படுக்கை வசதியும், பின்னர் 250 படுக்கை வசதியும் என 500 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்த உள்ளது. சென்னையில் மேலும் 9  ஸ்கிரினிங் மையங்கள் கூடுதலாக திறக்கப்பட உள்ளது என்றார். மேலும் அதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில்: சென்னையில் 45% பேர் பொது போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். அப்படி இருக்கும்போது உடனடியாக ஒரு விதியை பின்பற்றுவது கடினம்.

மின் மயானங்களை பொறுத்தவரை வடமாநிலங்களில் நிலவுவது போன்ற சூழல் இல்லை. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் நடைமுறைக்காக ஊழியர்கள் யாராவது பணம் கேட்பது தொடர்பாக புகார் கிடைத்தால் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியில் ஈடுபடும் தேர்தல் முகவர்களுக்கு இன்று இரண்டாவது நாளாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. முகவர்கள் இரண்டு தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும், இல்லையெனில் 48 மணி நேரத்திற்கு முன்னதாக நெகட்டிவ் பரிசோதனை முடிவு சான்றிதழ் இருக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: