கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போட்டிருந்தாலும் உடல் வெப்பநிலை 98.6 டிகிரி இருந்தால் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி இல்லை: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மே 2ம் தேதி (நாளை மறுதினம்) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் அரசு ஊழியர்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சி முகவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் 2 கட்ட தடுப்பூசி போட்டு இருப்பதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா இல்லை என்பதற்கான பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் குறித்த அனைத்து விதிமுறைகள் பற்றி தமிழக அரசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மே 2ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை என்பதால், முழு ஊரடங்கு அறிவிப்பது குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அதேநேரம் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருபவர்களுக்கு எந்த இடையூறும் இருக்காது. தபால் ஓட்டை பொறுத்தவரை, ஒரு மேஜையில் 500 ஓட்டுக்கள் முதலில் எண்ணப்படும். ஒரு சில இடங்களில் பக்கத்து அறையில் தனியாக தபால் ஓட்டு எண்ண வசதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளே முடிவு செய்ய அதிகாரம் உள்ளது.

அதற்காக தனியாக 4 மேஜைகள் போடலாம். சோழிங்கநல்லூரில் அதிக மின்னணு வாக்கு இயந்திரங்கள் இருந்தாலும், கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி அதற்கு ஏற்ப மேஜைகள் போடப்பட்டுள்ளது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் குறைந்தபட்சமாக 14 மேஜைகள் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டிருந்த அரசு அலுவலர்களில் பலருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், புதிதாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடப்பட்டு இருந்தாலும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் வரும் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். 98.6 டிகிரிக்கு மேல் வெப்பநிலை இருந்தால் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்கு எண்ணும் மையத்தில் சுகாதார துறை பணியாளர்களும் இருப்பார்கள். ஒவ்வொரு மேஜைக்கு ஒரு மைக்ரோ அப்சர்வர் இடம் பெறுவார். இவர் மத்திய அரசு ஊழியராக இருப்பார். தேர்தல் முடிவுகள் ரவுண்டு வாரியாக உடனுக்குடன் தேர்தல் இணையதளத்தில் வெளியிடப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள திரையிலும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யார் வெற்றி பெற்றுள்ளார் என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரிதான் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

* வாக்கு எண்ணும்பணியில் 16,387 பேர்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மேலும் கூறுகையில்,

‘‘75 வாக்கு எண்ணும் மையங்களில் 16,387 அரசு அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். 2016ம் ஆண்டு 13,592 அரசு ஊழியர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். கொரோனா காரணமாக தற்போது எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மையங்களில் எவ்வளவு போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்பது இன்று அல்லது நாளைக்குள் முடிவு செய்யப்படும்’ என்றார்.

Related Stories: