வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லும் வேட்பாளர்களின் ஏஜென்டுகளுக்கான கட்டுப்பாடுகளில் மாற்றம்: தேர்தல் ஆணையத்துக்கு திமுக கோரிக்கை

சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லும் வேட்பாளர்களின் ஏஜென்டுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 24ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற முடிவுடன் குறைந்த பட்சம் ஒரு தடுப்பூசியாக போட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த 28ம் தேதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகளில், 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனை முடிவு, 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரே ஆணையத்தில் 2 வெவ்வேறு விதமான கட்டுப்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டிருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் ஏஜென்டுகள் முழு உடல் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை 72 மணி நேரத்திற்குள் செய்யவேண்டுமா? அல்லது 48 மணி நேரத்திற்குள் செய்திருக்கு வேண்டுமா? என்று தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. 2 டோஸ் தடுப்பூசியை முதல் தடுப்பூசி போட்டதற்கு பிறகு 4 முதல் 8 வாரங்களுக்கு பிறகே போட வேண்டும். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ள நிலையில் 2 டோஸ் என்பது முடியாத காரியம்.

 

முழு உடல் கவசம் என்பது ஏற்க கூடியதல்ல. மருத்துவ நிபுணர்கள் முழு உடல் கவசத்தை 6 மணி நேரத்திற்குமேல் அணியக்கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். கொரோனா சிகிச்சையில் உள்ள மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கு மட்டுமே முழு உடல் கவசம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது. வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முக கவசம், கையுறை, சானிடைசர் போன்றவற்றை பயன்படுத்தினாலே போதுமானது. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் அனைத்தையும் திமுக சரியாக கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில் யாதார்த்தமான பிரச்னைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். எனவே, ஒரு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் முழு உடல் கவசம் தேவையில்லை என்பதை கட்டுப்பாடாக விதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது குறித்து தெளிவான விளக்கத்தை தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: