சடலங்களை எடுத்து செல்ல இலவசம் ரம்ஜான் நோன்பை விட மக்கள் சேவையே பெரிது: ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் மனிதநேயம்

பிரக்யாராஜ்: கொரோனா காலத்தில் ரம்ஜான் நோன்பை விட ஏழைகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்வதையே முக்கியமாக கருதும் ஓட்டுநர் பைசூலின் மனிதநேயம் பலராலும் போற்றப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், பிரக்யாராஜின் அட்டர்சூயா பகுதியை சேர்ந்தவர் பைசூல். ஆம்புலன்ஸ் டிரைவர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை மக்களின் சடலங்களை இலவசமாக ஆம்புலன்சில் எடுத்துச் செல்லும் சேவையை செய்து வருகிறார். தற்போது, கொரோனா பாதிப்பால் பலர் பலியாகி வரும் நிலையில், நிறைய ஏழைகள் ஆம்புலன்ஸ் வசதி இல்லாமலும், மருத்துவமனையில் இருந்து சடலங்களை எடுத்துச் செல்ல பணமில்லாமலும் தவிக்கின்றனர். அதுபோன்ற தேவை இருப்போருக்கு பைசூல் இலவச சேவை செய்து வருகிறார். கொரோனா நோயாளிகளுக்காக தனது பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘இது ஒரு அசாதாரணமான நேரம். எனக்கு அழைப்புகள் வந்ததும் முடிந்த வரை விரைவாக புறப்பட்டு சென்று விடுவேன். இதுபோன்ற சமயங்களில் ரம்ஜான் நோன்பை கூட என்னால் முறையாக கடைபிடிப்பது சாத்தியமில்லை. ஆனாலும், அல்லா என்னை புரிந்து கொள்வார்,’’ என்கிறார். இவர் சடலங்களை எடுத்துச் செல்வது மட்டுமல்ல, அநாதையாக இறப்பவர்களுக்கு குடும்பத்தில் ஒருவராக இறுதிச் சடங்கும் செய்கிறார். இவர் சடலங்களை கொண்டு செல்ல யாரிடமும் பணம் கேட்பதில்லை, அவர்களாகவே விரும்பி கொடுத்தால் மட்டும் ஏற்றுக் கொள்கிறார். ஆரம்பத்தில் தள்ளுவண்டியில் சடலங்களை எடுத்துச் சென்ற அவர் பின்னர் கடன் வாங்கி ஆம்புலன்ஸ் வாங்கி தொடர்ந்து தனது சேவையை தொடர்கிறார். இந்த சேவைக்காகவே இவர் திருமணம் கூட செய்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பைசூல் கூறுகையில், ‘‘திருமணம் எனது பணிக்கு இடையூறாக அமையும் என்பதால், திருமணமே செய்யாமல் தனியாக வாழ்ந்து வருகிறேன்,’’ என்கிறார்.

Related Stories: