ஆழ்கடலில் கப்பல் மோதிய விவகாரம்: மாயமான 11 மீனவர்கள் கரைக்கு திரும்புகிறார்கள்

நித்திரவிளை: ஆழ்கடலில் விசைப்படகு மீது கப்பல் மோதிய சம்பவத்தில் மூழ்கியதாக கூறப்பட்ட 11 மீனவர்கள் கரைக்கு வந்து கொண்டிருப்பதாக படகின் உரிமையாளர் தகவல் கொடுத்துள்ளார். குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வள்ளவிளையை சேர்ந்தவர் ஜோசப் பிராங்க்ளின் (46). இவருக்கு சொந்தமான விசைப்படகில், படகின் உரிமையாளர் மற்றும் வள்ளவிளையை சார்ந்த ஜாண்(20), சுரேஷ்(44) உள்ளிட்ட 11 பேர் கடந்த 9ம் தேதி இரவு தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்களின் படகு 23ம் தேதி மாயமானது. அதன்பிறகு கடந்த 24ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டு கரைக்கு வந்து கொண்டிருந்த வள்ளவிளையை சார்ந்த பெரியநாயகி என்ற விசைப்படகில் வந்த டெனிஸ்டன் என்பவர் மெர்சிடிஸ் என்ற விசைப்படகு கர்நாடகா மாநிலம் கார்வா துறைமுகத்தில் இருந்து 600 நாட்டிக்கல் தொலைவில் கடலில் மூழ்கி காணப்படுவதாகவும், அதில் இருந்த மீனவர்களை காணவில்லை என்றும் வள்ளவிளைக்கு தகவல் கொடுத்தார். இதனால் வள்ளவிளை மீனவ கிராமமே சோகத்தில் மூழ்கியது.

இதையடுத்து, வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த 9 விசைப்படகு மீனவர்கள் மற்றும் இந்திய கப்பல் படைக்கு சொந்தமான மீட்பு கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் குழுவினர் விரைந்து சென்று தேடினர். இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை, மெர்சிடிஸ் படகு உரிமையாளர் ஜோசப் பிராங்க்ளின் வள்ளவிளை பங்கு பேரவை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.  23ம் தேதி இரவு விசைப்படகில் கப்பல் மோதியதில் படகின் மேற்கூரை மட்டும் கடலில் கழன்று விழுந்ததாகவும், அதனால், நாங்கள் மெர்சிடிஸ் விசைப்படகில் கரைக்கு வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் மீனவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதலை அளித்துள்ளது.

Related Stories: