திருவள்ளூர் வாக்கு எண்ணும் மையத்தில் மீண்டும் சலசலப்பு!: திருட்டுத்தனமாக வாகனத்தில் வந்த Wifi கருவிகளால் சர்ச்சை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் வாக்கு எண்ணும் மையத்திற்கு திருட்டுத்தனமாக வாகனத்தில் கொண்டுவரப்பட்ட Wifi கருவிகளால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் பதிவான வாக்குகள் வேப்பம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி முகவர்கள் இரவு, பகலாக அங்கு வைக்கப்பட்டுள்ள வாக்கு பெட்டிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி திமுக-வினர் சோதனை செய்த போது அதில் 11 Wifi ரூட்டர் கருவிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக-வினர், அந்த வாகனத்தை சிறை பிடித்து அங்கிருந்த தேர்தல் அதிகாரியிடம் எதற்காக கொண்டுவரப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அந்த அதிகாரி மழுப்பலாக பதில் அளித்ததால் வாக்குவாதம் முற்றி பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் திமுக-வினரை சமாதானப்படுத்தியதுடன் அவர்கள் முன்னிலையிலேயே அந்த கருவிகளை வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியே அனுப்பினர். 

என்றாலும் திமுக தலைமையிடம் அனுமதி பெற்று இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் இதே வேப்பம்பட்டு மையத்தில் அடையாளம் தெரியாத வாகனம், ஆன்லைன் வகுப்பு என ஆட்கள் நடமாட்டம் போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

Related Stories: