சோலார் பேனல் மோசடி வழக்கு சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறை

திருவனந்தபுரம்: சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி ரூ.42.70 லட்சம் மோசடி செய்த வழக்கில் சரிதா நாயருக்கு கோழிக்கோடு நீதிமன்றம் 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவை சேர்ந்த சரிதா நாயர், தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி முறைகேடு செய்துள்ளார். இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர், ஜாமீனில் வெளியே இருந்தார். ஆனால், அவர் இந்த வழக்கு விசாரணைகளில் ஆஜராகாமல் இருந்ததால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கேரள மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் மஜீத் என்பவருக்கு வீட்டிலும், அவரது அலுவலகத்திலும் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி ரூ.42.70 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக சரிதா நாயருக்கு எதிராக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பாக அப்துல் மஜீத் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, கோழிக்கோடு கசபா போலீசார் சரிதா நாயர் மீது  வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கோழிக்கோடு மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்குவதற்காக பலமுறை நீதிபதி தேதி குறிப்பிட்ட போதிலும் சரிதா நாயர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார்.

இதையடுத்து கடந்த வாரம் அவரை கைது செய்ய கசபா போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 27ம் தேதி (நேற்று) வரை சிறையில் அடைக்க நீதிமன்றம்  உத்தரவிட்டது. இதையடுத்து காஞ்சங்காடு சிறையில் சரிதா நாயர் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மோசடி வழக்கை விசாரித்த நீதிமன்றம், சரிதா நாயருக்கு 6 வருடம் கடுங்காவல் சிறையும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதற்கிடையே சரிதா நாயருக்கு எதிராக மேலும் பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் மோசடி வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த வழக்குகளிலும் விரைவில்  அவருக்கு தீர்ப்பு வழங்கப்படும் என கருதப்படுகிறது.

Related Stories: