டெல்லி விவசாயிகள் போராட்ட விசயத்தில் மோடியும், அமித் ஷாவும் தவறான பாதையில் செல்கின்றனர்: அரியானா எம்எல்ஏவுக்கு மேகாலயா ஆளுநர் பகீர் கடிதம்..!

ஷில்லாங்: டெல்லியில் போராடும் விவசாயிகள் விசயத்தில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தவறான பாதையில் செல்கின்றனர் என்று அரியானா எம்எல்ஏவுக்கு எழுதிய கடிதத்தில் மேகாலாயா ஆளுநர் தெரிவித்துள்ளார். அரியானா மாநில பாஜக - ஜே.ஜே.பி கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சுயேட்சை எம்எல்ஏ சோம்பீர் சங்வான், மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து மாநில கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெற்றார். இவர், மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக்குக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்திற்கு ஆளுநர் சத்ய பால் மாலிக், எம்எல்ஏ சோம்பீர் சங்வானுக்கு எழுதிய பதிலில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் போராட்டம் மற்றும் விவசாய சட்டங்கள் குறித்து நீங்கள் எழுதிய விரிவான கடிதம் எனக்கு கிடைத்தது.

டெல்லியில் போராடும் விவசாயிகளை வெறுங்கையுடன் அனுப்பக்கூடாது என்று ஏற்கனவே பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் எடுத்து கூறினேன். விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அவர்களின் உண்மையான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறினேன். விவசாயிகளின் குரல்களை அடக்கக்கூடாது என்பதை தெளிவுபடுத்தினேன். அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும். உங்களுக்கு (விவசாயிகள்) கொடுத்த வாக்குறுதியில் இருந்து விலக மாட்டேன். வருகிற மே முதல் வாரத்தில் டெல்லிக்கு வருகிறேன். அப்போது விவசாயத் தலைவர்களை சந்தித்து, உங்களுக்கு ஆதரவான ஒரு தீர்வைக் காண முயற்சிக்கிறேன். இந்த போராட்டத்தில் அமைதியான முறையில் ஈடுபட்ட 300 விவசாயிகள் தங்களது உயிர்களை இழந்துள்ளனர்.

மத்திய அரசு இதுகுறித்து வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது கவலை அளிக்கிறது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதையும், அவர்கள் விவசாயிகள் மீது ேதவையற்ற அழுத்தத்தை கொடுக்க முயற்சிக்கக் கூடாது என்பதை அவர்களிடம் அப்போது வலியுறுத்த முயன்றேன்’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த மாதம் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஆளுநர் சத்யபால் மாலிக் அப்போது கூறுகையில், ‘மத்திய அரசு விவசாயிகளுடன் உடனே பேச வேண்டும். நான் அரசுக்கு தீங்கு விளைவிப்பதாக அவர்கள் (மத்திய அரசு) நினைத்தால், நான் எனது பதவியை விட்டு விலகிவிடுகிறேன். ஆளுநர் பதவியிலிருந்து விலகிய பிறகு, நான் எப்படி வேண்டுமானாலும் பேச முடியும். விவசாயிகள் போராட்டம் எவ்வளவு நாள் நீடிக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நாட்டிற்கு இழப்பு அதிகமாக இருக்கும். போராட்டத்தில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். ஆனால் யாருடைய வாயிலிருந்தும் ஒரு வார்த்தை கூட வெளியே வரவில்லை. இவ்வாறு இருப்பது முற்றிலும் இதயமற்ற செயலாகும்’ என்று காட்டமாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: