தேவையான அளவு உற்பத்தியாகிறது ஆக்சிஜனை கொண்டு செல்வதில்தான் சவால் உள்ளது: எல்.முருகன் தகவல்

சென்னை: இந்தியாவில் தேவையான ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், அதை கொண்டு செல்வதில் தான் சிக்கல்கள் எழுவதாக தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். இதுகுறித்து சென்னையில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவுவது கவலை அளிக்கிறது. மக்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு அறிவித்தது. அந்தவகையில், இதுவரையில் 13 கோடியே 55 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதத்தில் 15 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடும் வேலை தொடங்கப்பட்டுள்ளது.  

அதன்படி, இரு தடுப்பூசி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மூன்றாவது ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும். இந்தியாவில் ஆக்சிஜன் தேவையான அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், அதை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு போய் சேர்ப்பது தான் சவாலாக இருக்கிறது. இதை தெரிந்தே மத்திய அரசு மீது அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றன.

பல இன்னல்களை மீறி ராணுவ விமானம், ரயில் மூலமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு செல்லப்படுகிறது. ஆக்சிஜன்களை அந்தந்த மாவட்டத்திலேயே தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி தடுப்பாடு என்ற நிலை இல்லை. தேவையான தடுப்பூசிகள் வரும். மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி முகாம்களை அமைத்து தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

Related Stories: