இரணியம் மங்கலம் ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு மருத்துவ முகாம்

குளித்தலை : கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் இரணியம் மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட இரணிய மங்களம் அண்ணா நகர் காலனி, மேலப்பட்டி சமத்துவபுரம் உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகள் உள்ளது.இப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக 7க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது மேலும் ஒரு சிலர் இறந்ததாகவும் அப்பகுதி கிராம மக்கள் பெரும் பீதி அடைந்து வந்தனர்.

இதனால் இரணிய மங்கலம் ஊராட்சி பகுதிக்கு மருத்துவத் துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வீடு வீடாக சென்று பரிசோதனை செய்ய வேண்டும் எனசமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த செய்தி கடந்த 17ம் தேதி தினகரன் நாளிதழில் பிரசுரமானது. இதன் எதிரொலியால் நேற்று குளித்தலை வட்டார நடமாடும் மருத்துவக்குழுவினர் சார்பில் வளையப்பட்டி அண்ணாநகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடு, வீடாக கபசுர குடிநீர் வதழங்கப்பட்டு பரிசோதனைகள் நடைபெற்றது.

மேலும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .நிகழ்ச்சிக்கு குளித்தலை வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார் ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா சரவணன் முன்னிலை வகித்தார் இதில் கலந்து கொண்ட டாக்டர் லோகாம்பாள் பொதுமக்களிடையே பேசியபோது கிராமத்தில் வாழும் பொதுமக்கள் கொரோனோ வைரஸ் குறித்து அரசு அறிவித்திருக்கும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது சமூக இடைவெளியை பாதுகாக்கப்பட வேண்டும்.

பொது இடங்களுக்கு செல்லும் பொழுது முக கவசம் அணிவது கட்டாயம். மேலும் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட உடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று அதன்மூலம் பயனடைய வேண்டும் அவ்வப்பொழுது ஊராட்சி மன்றம் சார்பில் வழங்கப்படும் கபசுரக் குடிநீரை அனைவரும் பருக வேண்டும். இவை அனைத்தும் செய்து வந்தால் நாம் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் அதனால் கிராம பகுதிகளில் இருக்கும் நீங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன் சுகாதார ஆய்வாளர் அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் அப்பகுதி கிராம மக்கள் கொரோனா வைரஸ் குறித்து மக்கள் பயனடைய செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு உடனடியாக மருத்துவ முகாம் நடத்திய மருத்துவ குழுவினருக்கும் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: