ஸ்மார்ட் சிட்டி கடைகள் அமைப்பதை எதிர்த்து மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மெரினாவில் வியாபாரிகள் போராட்டம்: நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது

சென்னை: ஸ்மார்ட் சிட்டி கடைகள் அமைப்பதை எதிர்த்து மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மெரினாவில் போராட்டம் நடத்திய நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். மெரினா கடற்கரையில் 900 கடைகளை மட்டும் அனுமதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மாநகராட்சி வழங்கும் ஸ்மார்ட் வண்டி கடைகளை மட்டுமே அங்கு பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் ஏற்கனவே கடை வைத்திருந்த கடைகளில் 60 சதவீதம் அதாவது 540 கடைகளும், பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு 40 சதவீதம் அதாவது 360 கடைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்காக 14 ஆயிரத்து 322 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தது இதிலிருந்து 900 பயனாளிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். சிக்கிம் மாநில முன்னாள் தலைமை நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரி பங்கேற்று பயனாளிகளை தேர்வு செய்தார். அப்போது குலுக்கல் முறையில் பயனாளிகளுக்கான கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து குலுக்கல் நடைபெற்ற நாட்களிலேயே மெரினாவில் ஏற்கனவே வியாபாரம் செய்த அனைவருக்கும் கடை ஒதுக்கக் கோரியும், குலுக்கல் முறையில் வெளியாட்களுக்கு கடை ஒதுக்குவதை கண்டித்தும், மெரினா கடற்கரையில் கடை வைத்திருப்பவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் இதை எதிர்த்து நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடைகள் அமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் இன்று காலை 8 மணியளவில் முதல் கட்டமாக 50க்கும் மேற்பட்ட கடைகளை மெரினா கடற்கரையில் இறக்கி வரிசை படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது மெரினா கடற்கரையில் கடை வைத்திருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளது. இந்நிலையில் இதுபோன்று கடைகள் வைத்தால் எப்படி என்று கேட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த மெரினா போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் இறக்கப்பட்ட கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் இல்லையென்றால் அதுவரை போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர். இதையடுத்து போலீசார், மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இதற்கு மேல் எந்த நடவடிக்கையும் தற்போது எடுக்கவில்லை என்று கூறினர். ஆனாலும் தற்போது இறக்கப்பட்ட கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று வியாபாரிகள் கூறினர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து மயிலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Related Stories: