வேதாந்தா என்ற கொரோனா எங்கள் தலைமுறையே அழித்துவிடும்... கருத்து கேட்பு கூட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஆவேசம்!!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் 14 பேர், வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்த 6 பேர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் 8 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் கருத்து கேட்பு கூட்டம் துவங்குவதற்கு முன்பே கூட்ட அரங்கில் 50க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். அதன்பிறகு வந்தவர்களை போலீசார் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

இதற்கிடையில் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டிருந்த ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வேதாந்தா என்ற கொரோனா எங்கள் தலைமுறையே அழித்துவிடும் என்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கூறினர்.பின்னர் கடும் வாக்குவாதங்களுடன் கருத்து கேட்பு கூட்டம் தொடர்ந்து நடந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த நிலையில் கருத்து கேட்பு கூட்டம் நிறைவடைந்ததாக கலெக்டர் தெரிவித்தார். இதனிடையே தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது கல்வீச்சு சம்பவமும் நடந்தது. தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்காது என்று தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவாதம் அளித்துள்ளார்.  

பெண்கள் மீது கல்வீச்சு

கூட்டம் நடந்து கொண்டிருந்த போது வெளியே நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சில பெண்கள் கூட்டமாக வந்தனர். அப்போது எதிர்ப்பாளர் ஒருவர் அந்த பெண்களை நோக்கி கல்லை வீசி எறிந்துள்ளார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: