தொழிலாளர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகளை கண்காணிக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குழு: அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களும், வெளி மாநிலத்தில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்தவர்களும் சொந்த ஊர் திரும்பி வருவதால் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த சூழலில் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால், தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர் சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகளை கண்காணிக்கவும், தேவையான உதவிகளை செய்யவும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைத்து தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தவிட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள், தமிழகத்திலிருந்து வெளி மாநிலத்தில் சென்று பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் தமிழகத்தில் படிக்கும் வெளிமாநில மாணவர்கள், வெளிமாநிலத்தில் படிக்கும் தமிழக மாணவர்களை ஒருங்கிணைக்க கூடுதல் தலைமை செயலாளர் நஜிமுதீன், முதன்மை செயலாளர் அபூர்வா, ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதன், ஐஏஎஸ் அதிகாரி மைதிலி ராஜேந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள, முதியோர் இல்லத்தில் உள்ளவர்களை கண்காணிக்கவும், தேவையான உதவிகளை மேற்கொள்ளவும் கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன், செயலாளர்கள் விஜயராஜ் குமார், மதுமதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.பத்திரிகை மற்றும் செய்தி தொலைக்காட்சிகளை ஒருங்கிணைக்க சிப்காட் மேலாண்மை இயக்குனர் குமரகுருபரன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்க திட்ட இயக்குனர் தீபக் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: