ஞாயிறு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தினாலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு வரும் 30ம் தேதி வரை அமலில் உள்ளது. இதனால், இரவு 10 மணி முதல் காலை 4 மணிவரை பஸ்கள், மெட்ரோ மற்றும் மின்சார ரயில்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் முழு ஊரடங்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் சொந்த ஊர்களுக்கு ரயில்களில் செல்லத் தொடங்கிவிட்டனர். இதற்காக சென்ட்ரல், எழும்பூர் ரயில்நிலையங்களில் காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில் வடமாநிலங்களான ஜார்க்கண்ட், பீகார், ஓடிசா போன்ற மாநிலங்களுக்கு 45 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பீகார் மாநிலத்துக்கு 3, மேற்கு வங்கம் 10, ஓடிசா 2, உத்தரபிரதேசம் 2 என 17 சிறப்பு ரயில்களும், ஆலப்புழாவில் இருந்து சட்டீஸ்கருக்கு 7 சிறப்பு ரயில்களும், திருவனந்தபுரம் ஜங்சனில் இருந்து மேற்குவங்கம் 2, அசாம் 1 என 3 சிறப்பு ரயில்களும், எர்ணாகுளத்தில் இருந்து பீகாருக்கு 3, மேற்கு வங்ம் 1, ஜார்க்கண்ட் 2 என 6 சிறப்பு ரயில்களும், கொச்சிவேலி ஜங்சனில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு 3 சிறப்பு ரயில்களும், நாகர்கோவில் ஜங்சனில் இருந்து மேற்கு வங்கத்துக்கு 1 சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது.

அதேப்போன்று புதுச்சேரியில் இருந்து மேற்கு வங்கம் 1, ஓடிசா 1 என 2 சிறப்பு ரயில்களும், ராமேஸ்வரத்தில் இருந்து ஓடிசா 1, உத்தரபிரதேசம் 1 என 2 சிறப்பு ரயில்களும், தாம்பரத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு 1 சிறப்பு ரயிலும், திருச்சி ஜங்சனில் இருந்து மேற்கு வங்காளத்துக்கு 2 சிறப்பு ரயில்களும், கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலத்துக்கு 1 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதையடுத்து பீகார்க்கு 6, மேற்கு வங்காளம் 17, ஓடிசா 4, உத்தரபிரதேசம் 6, சட்டீஸ்கர் 7, அசாம் 3, ஜார்க்கண்ட் 2 என 45 சிறப்பு ரயில்கள் எப்போதும் போல் வழக்கமாக இயக்கப்படும். இந்த ரயில்களில் முன்பதிவு செய்து யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>