மண்டேலா திரைப்பட விவகாரம் சென்சார் போர்டு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படத்தை மறு தணிக்கை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்சார் போர்டு (திரைப்பட தணிக்கை வாரியம்) பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மருத்துவர் சமுதாயம் என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்ததாகும். காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த மண்டேலா திரைப்படம் ஏப்ரல் 4ம் தேதி தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது. இந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை கழிவறையை கழுவச் செய்வது போன்ற காட்சிகளும், முடி திருத்தும் தொழிலாளியை செருப்பால் அடிப்பது, காரில் ஏற அறுகதை இல்லை என்று காரின் பின்னே ஓடி வர சொல்வது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இதனை தணிக்கை குழு தணிக்கை செய்ய தவறி விட்டது. மேலும், இந்த காட்சிகள் மற்றும் வசனங்கள் மருத்துவர் சமுதாய மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவே இந்த படத்தை மீண்டும் தணிக்கை செய்யவேண்டும். சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் திரைப்பட தணிக்கை வாரியம், படத் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோ, இயக்குனர் மடோனே அஸ்வின் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 28ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Related Stories:

>