கொரோனா தடுப்பு உத்தரவுகளை அமல்படுத்தவில்லையெனில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம்: மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம் எச்சரிக்கை

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு உத்தரவுகளை அமல்படுத்தவில்லையெனில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளன பொதுச் செயலாளர் வி.துரைபாண்டியன் கூறியதாவது: கொரோனா பரவல் அதிவேகமெடுக்கும் இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களான அஞ்சல் அலுவலகம், முதன்மை கணக்காய்வு தலைவர் அலுவலகம் மற்றும் ராஜாஜி பவன் வளாகம், சாஸ்திரி பவன் வளாகம் உட்பட பல அலுவலகங்களில் மத்திய அரசின் கொரோனா தடுப்பு உத்தரவுகளுக்கு எதிராக 50 சதவீதம் சுழற்சி முறையில் ஊழியர்களுக்கு பணி, வேலை செய்யும் அலுவலகங்களில் சானிடைசர் வைப்பது,

சமூக இடைவெளியை பின்பற்றுவது உட்பட எந்தவொரு தடுப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படுவதில்லை. மாறாக, கொரோனா பரவலை ஊக்குவிக்கும் விதமாக ஊழியர்களை மொத்தமாக பணிக்கு வர சொல்வது, உடல்நலமற்ற ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணி செய்ய வாய்ப்பு மறுத்தல், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஊழியர்களையும் பணிக்கு வர கட்டாயப்படுத்துதல் உட்பட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். இந்நிலையில், உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகம்  மற்றும் மத்தியஅரசு அலுவலகங்களிலும் மத்திய அரசின்  கொரோனா பரவல் தடுப்பு உத்தரவுகளை அமல்படுத்தவில்லையெனில் மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் சார்பில் அஞ்சல் அலுவலகம், முதன்மை கணக்காய்வு தலைவர் அலுவலகம் உள்ளிட்ட அத்தகைய அலுவலக வாயில்கள் முன் பெரும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: