கொரோனா 2வது அலை பரவலால் வைகை அணைப் பூங்கா மீண்டும் மூடல்-சுருளி அருவிக்கு செல்ல தடை

ஆண்டிபட்டி/கம்பம் : கொரோனா 2வது அலை பரவல் எதிரொலியாக, ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைப் பூங்கா மீண்டும் மூடப்பட்டுள்ளது. கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணையின் தண்ணீர் வெளியேறும் ஆற்றின் இருபுற கரைகளிலும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்க ஏராளமான அம்சங்கள் உள்ளன.

தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், அண்டை மாநிலமான கேரளாவைச் சேர்ந்தவர்களும் வைகை அணைப் பூங்காவுக்கு வந்து செல்வர். கடந்தாண்டு கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. இதன்படிகடந்த ஆண்டு மார்ச் 15ம் தேதி வைகை அணைப் பூங்கா மூடப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததால், ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் 7ம் தேதி பூங்கா திறக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டும் கொரோன 2வது அலை பரவல் தீவிரமாகி வருகிறது. இதனால், தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பு, கோவில் திருவிழாக்களுக்கு ரத்து, சுற்றுலாத்தளங்களுக்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதையடுத்து வைகை அணைப் பூங்காவும் நேற்று காலை மூடப்பட்டது.  

பூங்காவில் உள்ள வலதுகரை பூங்கா பாதை, இடதுகரை பூங்கா பாதை, நீர்தேக்கப்பகுதிக்கு செல்லும் பாதை ஆகியவை அடைக்கப்பட்டன நேற்று பூங்காவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளையும் போலீசாரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் திருப்பி அனுப்பினர். இது குறித்த அறிவிப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த சில மாதமாக வைகை பூங்காவில் ஜேஜே வென இருந்த பூங்கா பகுதி தற்போது வெறிச்சோடிக் கிடக்கிறது. இதனால், பூங்கா பகுதியில் கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.

சுருளி அருவிக்கு செல்ல தடை

கம்பம்: கம்பம் அருகே உள்ள சுற்றுலாத்தலமான சுருளி அருவி, கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த 2019 மார்ச்சில் மூடப்பட்டது. பின்னர், 2021 மார்ச்சில் மீண்டும் திறக்கப்பட்டது. அதே நேரத்தில் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால். சுருளி அருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் நுழைவு கட்டணம் ரூ.30 செலுத்தி, வனப்பகுதிக்குள் மட்டும் நடந்து சென்று, இயற்கை வளத்தையும், அருவியையும் கண்டு களித்தனர்..

இந்நிலையில், தற்போது கொரோனா 2வது அலை பரவுவதால், நேற்று முதல் சுருளி அருவி வனப்பகுதிக்குள்  சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப் பட்டுள்ளதாக மேகமலை வன உயிரிணச்சரணாலயத்தின் கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்காக அறிவிப்பு பேனரையும் வைத்துள்ளனர்.

Related Stories: