கோவில்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?: வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி மதத் தலைவர்களுடன் தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை..!!

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரக்கூடிய நிலையில், வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி மதத் தலைவர்களுடன் தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மதம் சார்ந்த திருவிழாக்கள், கூட்டங்களுக்கு ஏப்ரல் 10ம் தேதி முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது. அடுத்தகட்டமாக திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு அது தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிப்பதற்காகவே இந்த ஆலோசனை கூட்டமானது நடைபெறுகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மதம் சார்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசை பொறுத்தவரையில் சம்பந்தப்பட்ட வழிபாட்டு தலங்களின் வழக்கமான நேரமானது அதிகபட்சமாக 10 மணி வரை பொதுமக்கள் வழிபாட்டிற்காக அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கலாம் என தெரிவித்துள்ளது. இருந்தாலும் வழிபாட்டு தலங்களில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டம் நடத்த அனுமதி இல்லை என இதற்கு முன்னதாகவே, தமிழக அரசு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடும் போது வெளியிட்டிருக்கிறது.

இந்த நிலையில் அடுத்தகட்டமாக வழிபாட்டு தலங்களில் நிலவக்கூடிய சூழல், வழிபாட்டு நெறிமுறைகளை எவ்வாறு கடைபிடிப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் வழிபாட்டு தலங்களில் அடுத்ததடுத்து முக்கியமான மதம் சார்ந்த நிகழ்வுகள் இருக்கும் பட்சத்தில் அதனை தற்காலத்திற்கு ஒத்திவைக்குமாறு அறிவுறுத்துவது போன்ற பல்வேறு விவரங்கள் குறித்து மதத் தலைவர்களுடன் தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பின்பாக வழிபாட்டு தலங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்த புதிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>