தாய் குறித்து தவறாக பேசியதால் ஆத்திரம்: ஆட்டோவில் தூங்கிய பெயின்டர் சுத்தியலால் அடித்து படுகொலை: போதை நண்பர்கள் கைது

சென்னை: குடிபோதையில் வழக்கு வாபஸ் பெறுவதில் ஏற்பட்ட தகராறில், தாய் குறித்து தவறாக பேசியதால், ஆட்டோவில் தூங்கிய பெயின்டரை  நண்பர்களே சுத்தியலால் தலையில் அடித்து படுகொலை செய்த சம்பவம் எம்ஜிஆர் நகரில் பரபரப்ைப ஏற்படுத்தியது. சென்னை எம்ஜிஆர் நகர்,  வள்ளலார் நகரை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன் (30). பெயின்டரான இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர், தினமும் குடித்துவிட்டு  தகராறில் ஈடுபட்டு வந்ததால், அவரது மனைவி குழந்தைகளுடன் பிரிந்து சென்று, தனியாக வசித்து வருகிறார். காசிவிஸ்வநாதன் அதே பகுதியை  சேர்ந்த நண்பர்களான சுந்தர் (32), பரமகுரு (42) ஆகியோருடன் வீடுகளுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். வழக்கமாக பணி முடிந்ததும்  நண்பர்களுடன் காசி விஸ்வநாதன் மது அருந்துவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தார்.

அப்போது, கொரோனா காலத்தில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில் வாங்கும்போது ஏற்பட்ட தகராறில் சுந்தர் அளித்த புகாரின் பேரில், காசிவிஸ்வநாதன்  நண்பர்களான சுரேஷ் மற்றும் இளங்கோ மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருவதாக  கூறப்படுகிறது. தனது நண்பர்கள் மீது கொடுத்த புகாரை திரும்ப பெறக்கோரி சுந்தரை காசி விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவர்  மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது காசிவிஸ்வநாதன், சுந்தரின் தாய் குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.  பின்னர் அங்ககிருந்த பொதுமக்கள் இருவரையும் விலக்கி விட்டு அனுப்பி வைத்தனர். பிறகு காசி விஸ்வநாதன் போதை காரணமாக வீட்டிற்கு செல்ல  முடியாமல் அருகில் நின்ற ஆட்டோவில் படுத்து தூங்கிவிட்டார். தனது தாய் குறித்து தவறாக பேசியதால் போதையில் காசி விஸ்வநாதனை கொலை  செய்ய வேண்டும் என்று சுந்தர் முடிவு செய்துள்ளார். இதற்கு அவரது நண்பர் பரமகுருவும் உதவி செய்வதாக கூறியுள்ளார்.

அதைதொடர்ந்து சுந்தர் மற்றும் பரமகுரு ஆகியோர் காசி விஸ்வநாதன் ஆட்டோவில் தூங்கி கொண்டிருந்தபோது, அருகே கட்டிட வேலை நடந்து  வரும் பகுதியில் வைத்திருந்த சுத்தியலை எடுத்து வந்து காசிவிஸ்வநாதன் தலையில் சரமாரியாக அடித்து படுகொலை செய்தனர். இதை பார்த்த  பொதுமக்கள் சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த பெயின்டர் காசி  விஸ்வநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை குறித்து வழக்கு  பதிவு செய்த போலீசார், போதையில் அஜந்தா பேருந்து நிலையம் அருகே இருந்த சுந்தர் மற்றும் பரமகுருவை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து  கொலைக்கு பயன்படுத்திய சுத்தியல் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: