தமிழகத்தில் நடப்பாண்டில் 9,018 மின்வாகனம் விற்பனை

சென்னை: தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.  நடப்பாண்டில் இதுவரை 9,018 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. மேலும் கடந்த ஆண்டு மின்சார வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனையானது  மூன்று மாதங்களில் தாண்டிவிட்டது. எனவே வரும் காலங்களில் இத்தகைய வாகனங்களில் பயன்பாடு மேலும் உயர வாய்ப்புள்ளது. தமிழகத்தில்  தற்போதைய நிலவரப்படி 2 கோடியே 81 லட்சத்து 80 ஆயிரத்து 452க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்கி வருகிறது. இதனால், கடுமையான  போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுதவிர  இறக்குமதி செய்து பெட்ரோலிய பொருட்களை பயன்படுத்துவதால், அதற்கு பல  ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது.

மேலும் பெட்ரோல், டீசல் பயன்பாடு நாட்டில் அதிகமாக இருப்பதால், சுற்றுச்சூழலும் கடுமையான மாசுபாட்டை சந்திக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட  இப்பிரச்னைகளை களைவதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் ‘பேட்டரி’யால் இயங்கும், கார், பைக் உள்ளிட்ட எலக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில்  பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்தும்படி மக்களிடத்தில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் மின்சாரத்தினால் இயங்கும்  வாகனங்களை அதிகமானோர் பயன்படுத்துவதற்கு வசதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு மின்சார வாகனக்  கொள்கை-2019 வெளியிடப்பட்டது. இதன்படி மின்சார வாகனங்களை இயக்குவோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி அனைத்து  மின்சார இருசக்கர வாகனங்கள், கார்கள், மூன்று சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கு 100 சதவிகித  மோட்டார் வாகன வரி விலக்கு வழங்கப்படும். இந்த வரி விலக்கு, 2022ம் ஆண்டு இறுதி வரை வழங்கப்படும். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு  விற்பனை செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான மாநில சரக்கு மற்றும் சேவை வரி 100 சதவிகிதம் திரும்ப வழங்கப்படும்.

இந்த சலுகை 2030ம் ஆண்டு வரை வழங்கப்படும். அரசு தொழிற் பூங்காக்களில், மின்சார வாகனங்கள், மின் ஏற்று உபகரணங்கள் மற்றும்  மின்கலன்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைக்க முன்வரும் நிறுவனங்களுக்கு, நிலத்தின் விலையில் 20 சதவிகிதம் வரை மானியமாக  வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியமும் மின்சார வாகனங்களுக்கான பொது  சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.  இதுபோன்ற நடவடிக்கைகளின்  காரணமாகவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பலரும் தற்போது மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை  பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 78 ஆயிரத்து 660 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதில், மின்சார  வாகனத்தின் விற்பனையானது 9 ஆயிரத்து 18 ஆகவுள்ளது. இதுவே கடந்த 2020ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் 14 லட்சத்து 92 ஆயிரத்து 234  வாகனங்கள் விற்பனையாகி இருக்கிறது. இதில், மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 696 ஆகும். மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள  விழிப்புணர்வு காரணமாக, நடப்பாண்டு தொடங்கி 4 மாதங்களுக்குள் கடந்த ஆண்டை விட கூடுதலாக மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.  இதேபோல் கடந்த 2019ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 19 லட்சத்து 68 ஆயிரத்து 157 வாகனங்கள் விற்பனையானது. இதில் மின்சாரத்தில் இயங்கும்  வாகனங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 444 ஆகும். வரும்காலங்களில் மின்சார வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Related Stories: