பழநி தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திர அறையில் லேசர் ஒளி தெரிந்ததால் பரபரப்பு: ஹேக் செய்ய முயற்சியா?; தேர்தல் அதிகாரியிடம் திமுகவினர் புகார்

சின்னாளபட்டி: பழநி தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக் கதவில் லேசர் ஒளி பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 1 மணியளவில் பழநி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையின் கதவில் முதலில் புள்ளி வடிவில் லேசர் போல வெள்ளை நிற ஒளியும், அதன் பின்பு இரண்டு ஒளிகளும் தெரிந்துள்ளது.

இது சிசிடிவி கேமராவில் பதிவானது. இதையடுத்து சிசிடிவி கேமரா செயல்பாடுகளை அதிகாரிகள் மானிட்டர் மூலம் பார்வையிட்டனர். அங்கிருந்த திமுக வேட்பாளர்களின் முகவர்கள் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் காமாட்சி, துணை அமைப்பாளர் சூசை ராபர்ட் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தனர். அதன்படி ஒளி வந்தது எப்படி, யாராவது நோட்டமிட்டனரா என்பது தொடர்பாக சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்கள் அருகே கம்ப்யூட்டர்கள் செட்டப்புடன் கன்டெய்னர் லாரிகள் உலா வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. தற்போது ஒளி ஊடுருவலால், ஹேக்கிங் செய்ய முயற்சி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வாக்குப்பதிவு அறையின் கதவில் ஒளி தெரிந்தது திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: